Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

பறவைக் காய்ச்சலால் நாமக்கல்லில் 2 கோடி முட்டை தேக்கம்: ஒரே வாரத்தில் விலை 90 காசுகள் குறைந்ததால் பண்ணையாளர்கள் கவலை

நாமக்கல்

பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நேற்று ஒரே நாளில் 40 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை 90 காசுகள் சரிந்திருப்பது கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பறவைக் காய்ச்சல் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை வர்த்தகம் பாதிக்கப்பட்டுஉள்ளது. நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் வீதம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 2 கோடி முட்டைகள் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள 2 கோடி முட்டைகள் மாநிலம் முழுவதற்கும், வட மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பறவைக்காய்ச்சல் காரணமாக கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து முட்டை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், முட்டைகள் பண்ணைகளில் தேக்கமடையும் நிலை உருவாகியுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான முட்டைகள் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால், முட்டை விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டலக் கூட்டம் அதன் தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பி.செல்வராஜ் பேசும்போது, “பறவைக் காய்ச்சல் பீதியால் வடமாநிலம் உட்பட பல்வேறு மண்டலங்களிலும் முட்டை விலை சரிவடைந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி முட்டை வியாபாரிகள் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலையைக் குறைத்து கொள்முதல் செய்கின்றனர். தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பீதி பெரிய அளவில் இல்லாவிட்டாலும், மற்ற மண்டலங்களுக்கு இணையாக முட்டை விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முட்டைகள் தேக்கமடைவதைத் தவிர்க்க அகில இந்திய விலைக்கு ஏற்ப முட்டை விலையை குறைக்க வேண்டும் என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி 460 காசுகளாக இருந்த முட்டை விலை 40 காசுகள் குறைக்கப்பட்டு 420 காசுகளாக நிர்ணயம் செய்யப்படுகிறது” என்றார்.

இதனிடையே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை 90 காசுகள் குறைந்திருப்பது கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது. இதுபோல் பல்லடத்தில் நடைபெற்ற பிசிசி கூட்டத்தில் ரூ.74 ஆக இருந்த கறிக்கோழி விலை ரூ.2 குறைத்து ரூ.72ஆக வும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.50-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

விலை குறைக்க காரணம்?

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறும்போது, “அருகே உள்ள ஹைதராபாத்தில் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது. அதனால், இங்கும் குறைக்க வேண்டிய நிலை உள்ளது. விலை குறைக்காவிட்டால் ஹைதராபாத் முட்டையை வியாபாரிகள் கொள்முதல் செய்வர். வட மாநிலங்களில் இருந்து தீவனபொருட்கள் வந்து கொண்டுதான் உள்ளன என்றார்.

26 இடங்களில் சோதனை

கேேரள மாநிலத்தில் பறவைகாய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து தமிழக அரசு கேரள எல்லைகளில் 26 சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை, தென்காசி மாவட்டத்தில் புளியறை, தேனி மாவட்டத்தில் கம்பம் மெட்டு, போடிமெட்டு, தேனி மெட்டு, திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, கோவை மாவட்டத்தில் வாளையார், ஆனைக்கட்டி, வெள்ளாண்டவளம், மேல்பாறை, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், சேமனாபதி, வீரகவுண்டன்புதூர், நடுப்புரி, ஜமீன்காளியாபுரம், வடக்குக்காடு, நீலகிரி மாவட்டத்தில் கக்கநல்லா, நம்பியூர் குன்னு, தளூர், சோழடி, காக்குண்டி, பூலாக்குன்னூர், நடுகானி, பட்டவாயல் ஆகிய 26 இடங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சோதனைச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்கள்மீதும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x