Last Updated : 12 Jan, 2021 03:13 AM

 

Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

களைகட்டும் பொங்கல் பித்தளை பானைகள்; விற்பனை கரோனாவால் பாதிப்பில்லை: அனுப்பர்பாளையம் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

அனுப்பர்பாளையத்தில் விற்பனைக்காக அடுக்கிவைக்கப்பட்டுள்ள பொங்கல் பானைகள்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் அனுப்பர் பாளையம் மற்றும் அதனை சார்ந்த அங்கேரிபாளையம், செட்டி பாளையம், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட எவர்சில்வர், செம்பு, பித்தளை உலோகங்களைக் கொண்டு பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் பட்டறைகள் செயல்படுகின்றன. இங்கு பல தலைமுறைகளை கடந்து பாத்திர உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது.

அனுப்பர்பாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் பாத்திரங் களின் 80 சதவீத உற்பத்தி, கை வேலைப்பாடு மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. பாத்திர உற்பத்திக்கென பிரத்யேக இயந்திரங்கள் வந்து விட்டாலும், இங்கு ஆரம்பம் முதல் தற்போது வரை கை வேலைப்பாடு மூலமாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன. இது பாத்திரங்களின் ஆயுள் அதிகரிக்க முக்கிய காரண மாகக் கூறப்படுகிறது. அனுப்பர் பாளையம் பாத்திரங்களுக்கான மவுசு மக்களிடம் நிலைத்திருக்க அதுவே காரணம் என கூறுகின்றனர் உற்பத்தியாளர்கள்.

தமிழர் பண்டிகையான பொங்கல் வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்த 3 நாட்களாக அனுப்பர்பாளையத்தில் பொங்கல் பானை விற்பனை களைகட்டி வருகிறது. சுமார் அரை கிலோ அரிசி வேக வைக்கும் அளவில் இருந்து 1 கிலோ, 2 கிலோ, 5 கிலோ, 10 கிலோ வரை அரிசி வேக பல்வேறு வடிவங்களில் சில்வர், பித்தளை மற்றும் செம்பு உலோகங்களால் செய்யப்பட்ட பொங்கல் பானைகள், அனுப்பர்பாளையம் பகுதியில் பாத்திர உற்பத்தி மையங்கள், கடைகளில் வரிசை கட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ரூ.800 வரை விற்பனை

பித்தளை பானை அதன் எடையில் கிலோ ரூ.750 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தமிழர்கள் வீடுகளில் தை முதல் தேதியும், கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகள் தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கல் தினத்திலும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம். பாரம்பரிய முறையில் மண் பானையில் பொங்கல் வைக்க அச்சப்படும் மக்களின் அடுத்த தேர்வு பித்தளை பானைகளாகவே உள்ளன. இதனால், அனுப்பர்பாளையம் பிரதான சாலை மற்றும் வீதிகளில் சில்வர் பானைகளைவிட பித்தளை பானைகள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர் உற்பத்தி யாளர்களும், வியாபாரிகளும்.

இதுதொடர்பாக அனுப்பர் பாளையத்தை சேர்ந்த பாத்திர உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கூறும்போது, "பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் பானைகளின் விற்பனைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடு கையில் இந்த ஆண்டு அதே அளவில் ஆர்டர்கள் கிடைக்கப் பெற்று, ஆர்டர்கள் அனைத்தையும் முடித்து வெளியூர்களுக்கு அனுப்பிவிட்டோம்.

கரோனா பாதிப்பால் பொங்கல் பானைகள் விற்பனை பாதிக்கப்பட்டதாக தெரிய வில்லை.

உதாரணத்துக்கு, கடந்த ஆண்டு ரூ.6 லட்சத்துக்கு ஆர்டர் கிடைத்தது என்றால், தற்போது அதே அளவுக்கு உற்பத்தியாளர்களுக்கு ஆர்டர்கள் கிடைத்துள்ளன. பெரிய வித்தியாசம் இல்லை.

உள்ளூர் விற்பனையை பொறுத்தவரை குறைவு எனக் கூற முடியாத அளவுக்கு சராசரியாக உள்ளது. நாளை (இன்று) மற்றும் நாளை மறுதினம் (புதன்கிழமை) விற்பனை பெரிய அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்.

கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு மூலப்பொருட்கள் விலை 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதை ஈடுசெய்ய பானைகளின் விலையும் சற்று உயர்த்தப்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x