

கரோனா ஊரடங்கால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வழக்கமான மின்சார ரயில்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை. இருப்பினும், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பயணம் செய்ய வசதியாக தினமும் 600-க்கும் மேற்பட்ட மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பணி, தொழில், வியாபாரத்துக்காக வெளியே செல்வோருக்கு இது மிகவும் வசதியாக இருக்கிறது. இருப்பினும், அலுவலக நேரம் அல்லாத, நெரிசல் குறைவான நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, காலை 7 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் அனைவரும் செல்ல முடியாது என நேரக் கட்டுப்பாடு இருப்பதால், பயணிகள் மத்தியில் ஏமாற்றம் இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், மேற்கண்ட கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.