Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

பாஜக குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: அதிமுகவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பொங்கல் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு

சென்னை

கூட்டணி கட்சிகளை அழிக்கும் அழிவு சக்தி பாஜக என்பதை அதிமுகவும், அதன் தொண்டர்களும் உணர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. 74 பானைகளில் மகளிர் காங்கிரஸார் பொங்கல் வைத்தனர். பொங்கல் விழாவை கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். முன்னாள் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு, பொருளாளர் ரூபி மனோகரன், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதா, மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் ஆகியோரின் நினைவு நாளையொட்டி, அவர்களது உருவப் படத்துக்கு அழகிரி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

கூட்டணி கட்சிகளை அழிப்பதுதான் பாஜகவின் வேலையாக உள்ளது. பாஜக எத்தகைய அழிவு சக்தி என்பதை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தெளிவுபடுத்தி உள்ளார். இதை அதிமுகவும் அதன் தொண்டர்களும் உணர வேண்டும். முதல்வர் வேட்பாளரைக்கூட தெளிவாக தேர்வு செய்ய முடியாத நிலையில் அதிமுக அணி உள்ளது. பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக இன்னமும்கூட கூட்டணி கட்சிகள் ஏற்கவில்லை.

அதே நேரத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலிமையாக உள்ளது. திமுக கூட்டணி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெறும்.

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் காங்கிரஸுக்கு கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கடும் கண்டனத்துக்குரியது.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. முதல்வர், அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. முதல்வர் மீதான வழக்கை விசாரிக்க விடாமல் தடையாணை பெற்றுள்ளனர். அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது சிபிஐ விசாரணையை தொடங்காவிட்டால் சிபிஐ அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x