Last Updated : 11 Jan, 2021 07:23 PM

 

Published : 11 Jan 2021 07:23 PM
Last Updated : 11 Jan 2021 07:23 PM

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு: விவசாயிகள் வலியுறுத்தல்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் இன்று மனு அளித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சிவ.சூரியன் தலைமையில் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். மழையில் மூழ்கியும், மழைநீர் சூழ்ந்தும் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அவர்கள் தங்களுடன் எடுத்து வந்திருந்தனர்.

தொடர்ந்து, அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

"மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், திருச்சி மற்றும் கரூா் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவ்வப்போது பெய்த மழையால் பாசனத்துக்குப் போதிய தண்ணீர் கிடைத்ததால் இரு மாவட்டங்களிலும் பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்படும் ஒரு போக சாகுபடியான சம்பா சாகுபடி, முன்கூட்டியே தொடங்கப்பட்டது. இந்த நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக அவ்வப்போதும், தொடர்ந்தும் பெய்து வரும் மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வயலிலேயே சாய்ந்துவிட்டன.

குறிப்பாக, திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூா் வட்டாரத்துக்குட்பட்ட இனாம்புலியூர், போசம்பட்டி, போதாவூர், பெருகமணி, அணலை, திருப்பராய்த்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், கரூர் மாவட்டத்தில் நச்சலூர், இனுங்கூர், நெய்தலூர் காலனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மற்றும் குளம், கிணற்றுத் தண்ணீரை நம்பிப் பாசனம் மேற்கொள்ளப்படும் மணப்பாறை ஆகிய பகுதிகளிலும் நெற்பயிர்கள் பெருமளவில் மழைநீரில் மூழ்கி, விவசாயிகளுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏக்கருக்கு ரூ.30,000 வரை விவசாயிகள் செலவழித்துள்ள நிலையில், அறுவடை நேரத்தில் நேரிட்ட இழப்பு பெரும் வேதனையை அளித்துள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தில் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து ஈரப்பதத்தைக் கணக்கில் கொள்ளாமல் நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும்."

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x