Published : 11 Jan 2021 07:01 PM
Last Updated : 11 Jan 2021 07:01 PM

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்றுக்கொள்ளும்; மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி பேட்டி: முடிவுக்கு வந்தது சர்ச்சை

கூட்டணியின் பெரிய கட்சி அதிமுக. அவர்கள்தான் முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என பாஜக மாநிலப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். இதன் மூலம் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன. அப்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை யார் என சர்ச்சை எழுந்தது. அதிமுகதான் தமிழகத்தில் பெரிய கட்சி என்பதால் அதிமுகவே கூட்டணிக்குத் தலைமை என ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அதிமுக குறித்தும், ஆட்சி குறித்தும் பாஜகவினர் விமர்சித்து வந்தனர். அதிமுக தலைமையும் பாஜகவின் பல அம்சங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. அதிமுக - பாஜக கூட்டணி உள்ளதா என்கிற கேள்வியும் எழுந்தது.

ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பு காரணமாக தமிழகத்தில் கூட்டணி எப்படி அமையும் என்கிற சந்தேகம் எழுந்தது. ஒருவேளை ரஜினி வந்தால் பாஜக - ரஜினி இணையலாம் என்கிற ரீதியில் பலரும் பேசி வந்தனர். இந்நிலையில் அமித் ஷா சென்னை வந்தபோது, பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும் என ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்தனர். ஆனாலும், அமித் ஷா கூட்டணி பற்றிப் பேசாமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அதை பாஜக தலைவர்கள் அங்கீகரிக்காமல் மவுனம் காத்து வந்தனர். ஒரு கட்டத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜகதான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் என பகிரங்கமாக அறிவித்தார். தேர்தலுக்குப் பின் முதல்வர் வேட்பாளர் தேர்வு என்று பாஜக தலைவர்கள் ஆங்காங்கே பேசினர்.

முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி உட்பட சமீபத்தில் இணைந்த குஷ்பு உட்படப் பலரும் பேசினர். இதனிடையே அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும், பொதுக்குழுக் கூட்டத்திலும் இதுகுறித்து அதிமுக தலைவர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி விமர்சித்தார்.

இந்நிலையில் குமரியில் பொங்கல் விழாவில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் ஆள்கிறார். அதிமுக பொதுக்குழுவைக் கூட்டிதான் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முடிவு செய்துள்ளது. அதுபோல பாஜகவும் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திருச்சியில் பேட்டி அளித்த பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, முதல்வர் வேட்பாளரை அதிமுகவே முடிவு செய்யும் எனத் தெரிவித்தார். கூட்டணியில் அதிமுக மேஜர் பார்ட்னர். அவர்கள் முடிவெடுப்பதை மைனர் பார்ட்னரான பாஜக ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவித்தார்.

இதன் மூலம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை பாஜக ஏற்றுக்கொள்கிறது எனத் தெரியவந்துள்ளது. இதனால் இதுவரை அதிமுக - பாஜக இடையே இருந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x