

வரும் சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தேமுதிகவில் இணையும் விழா, திருப்பூர் அருள்புரத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் முத்துவெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். இதில், பொருளாளர் பிரேமலதா, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர், கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினர்.
பின்னர், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இங்கு திரண்டுள்ள கூட்டத்தை, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதலாம். விஜயகாந்தின் உண்மைத் தொண்டர்கள்தான் இங்கு கூடியுள்ளனர். கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டி, நிர்வாகிகளின் கருத்தை அறிந்த பின்னர், தேர்தல் கூட்டணி குறித்த முடிவை விஜயகாந்த் அறிவிப்பார்.
அதிமுகவைப் பொறுத்தவரை, முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் பாஜக சார்பில் அறிவிக்கப்படுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
நாங்கள் தற்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம். வரும் தேர்தலில் முரசு சின்னத்தில் தேமுதிக போட்டியிடும். தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார்.
திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின், பெண்களை தவறாகப் பேசியிருந்தால் இனியாவது திருத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.