Published : 16 Oct 2015 10:56 AM
Last Updated : 16 Oct 2015 10:56 AM

ஆர்.கே.நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

அயனாவரம், என்.எம்.கே. தெரு முதல் சந்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட சிறிய கழிவுநீர் குழாய்கள், மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்றவாறு மாற்றப்படவில்லை. அப்பகுதி யில் பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. அதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. இது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்.

வாசகி, அயனாவரம்.

***

நிறுத்தப்பட்ட பஸ் சேவை

கோயம்பேடு- செங்கல்பட்டு இடையே பல ஆண்டுகளாக 500சி என்ற எண் கொண்ட மாநகர பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 2 பஸ்கள் ஏறி, அதிக கட்டணம் செலுத்தி கோயம்பேட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.

கே.என்.ஜி.விநாயகம், சிங்கபெருமாள்கோவில்.

***

விரட்டும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்

குரோம்பேட்டை, உமையாள்புரம் காலனி, அவ்வையார் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குழந்தைகளை நாய்கள் கூட்டமாக துரத்துகின்றன. அதனால் குழந்தைகளை தனியாக வெளியில் விடமுடியவில்லை. அத்தெரு வழியாக வீட்டுக்கு செல்ல வேண்டுமென்றால், நாய்களை விரட்ட 4 கற்களுடன் செல்லவேண்டியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அப்பகுதியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கே.பி.சாரதா, குரோம்பேட்டை

***

கழிவு நீரால் கொசுத் தொல்லை

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சி, லால்பகதூர் சாஸ்திரி தெருவில் திறந்தவெளியில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அதிலிருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இது தொடர்பாக மேலமையூர் ஊராட்சியில் புகார் தெரிவித்தும், கொசு மருந்து கூட அடிக்கவில்லை. எனவே இப்பகுதியில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

***

சி.கண்ணன், செங்கல்பட்டு .

***

குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை தேவை

மாதவரம் மண்டலம், 24-வது வார்டு புத்தகரம், சூரப்பேடு பகுதிகள் சென்னையுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளாகும். அங்கு சென்னை குடிநீர் வாரியம் குடிநீர் விநியோகிப்பதில்லை. தனியாரிடம்தான் பணம் கொடுத்து குடிநீர் வாங்க வேண்டியுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளோர் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் இலவசமாக குடிநீர் விநியோகிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

வி.கமலநாதன், புத்தகரம்.

***

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

ஆர்.கே.நகர் பகுதியில் எம்.ஜி.ஆர்.நகர் 2-வது தெருவில் திறந்தவெளியில் 500-க்கும் மேற்பட்ட டயர்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது மழைக் காலம் என்பதால் அதிலிருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே திறந்தவெளியில் போடப்பட்டுள்ள டயர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.இளங்காமணி, ஆர்.கே.நகர்.

***

நடை மேம்பாலம் அமைக்கப்படுமா?

வில்லிவாக்கம் ரயில் நிலையத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருக்கும் பொதுமக்கள் நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் பேர் தண்டவாளத்தை கடந்துதான் செல்கின்றனர். இதனால் பலர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே பொதுமக்கள் வசதிக்காக நடை மேம்பாலம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.கமலநாதன், வில்லிவாக்கம்.

***

நூலகம் அருகே குப்பை குவியல்

வில்லிவாக்கம் பஸ் டெப்போ எதிரில் அம்மா உணவகம் மற்றும் நூலகம் அமைந்துள்ளது. அதன் அருகில் குப்பை அள்ளப்படாமல் கிடப்பதால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இது தொடர்பாக மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x