Published : 11 Jan 2021 03:25 AM
Last Updated : 11 Jan 2021 03:25 AM

சிறப்பு காவல் படையில் இருந்து சென்னை ஆயுதப்படைக்கு 3,019 காவலர்கள் பணி மாற்றம்: காவலர்களுக்கு காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை

தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்து சென்னை பெருநகர காவல் ஆயுதப்படைக்கு 3,019 காவலர்கள் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் குற்ற செயல்களை தடுக்கவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ரோந்து பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. களத்திலும் அதிக அளவு போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு வசதியாக, சென்னையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து உட்பட பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய ஆயுதப்படையில் இருந்து பணிமூப்பு அடிப்படையில் 2,200 ஆயுதப்படை காவலர்கள் கடந்த மாதம் பணியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்து பணிமூப்பு அடிப்படையில் 1,536 பெண்கள், 1,483 ஆண்கள் என மொத்தம் 3,019 காவலர்கள் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேவைப்படும் நேரத்தில் இவர்களும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து பணிபுரிவார்கள். விரைவில் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் பாதுகாப்பு, கண்காணிப்பு, ரோந்து பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுதப்படை பிரிவுக்கு புதிதாக வந்துள்ள காவலர்கள் சவாலான செயல்களை திறம்பட மேற்கொள்ள வேண்டும். மிகுந்த கவனத்துடன் பணியாற்றி சென்னை பெருநகர காவல் துறையின் மாண்பை காக்க வேண்டும் என்று, புதிதாக ஆயுதப்படைக்கு வந்துள்ள காவலர்களுக்கு காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை வழங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x