Published : 11 Jan 2021 03:25 AM
Last Updated : 11 Jan 2021 03:25 AM

செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: அச்சத்தில் உறைந்த பயணிகள்

செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கும் ஓட்டுநர்.

வண்டலூர்

சென்னை புறநகரில் செல்போனில் பேசியபடி அரசு பேருந்தை, ஓட்டுநர்கள் இயக்குவது வாடிக்கையாகி விட்டது. உயிர் அச்சத்தில் பொதுமக்கள் பயணிக்கின்றனர்.

சென்னை புறநகரில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளை ஓட்டுநர்கள் செல்போனில் பேசியபடியே இயக்குகின்றனர். இதனால் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும்போது செல்போன் பயன்படுத்துவதை, தட்டிகேட்கும் பயணிகளை தரக்குறைவாக பேசுவது, தாக்குவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் நேற்று தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் மாநகரப் பேருந்தில் (TAJ 1934) பேருந்தின் ஓட்டுநர் தனது செல்போனில் அடிக்கடி பேசியபடி பேருந்தை இயக்கினார். இதைப் பார்த்து பயணிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால், அவர் அதை லட்சியம் செய்யவில்லை. தொடர்ந்து அழைப்பு வர போனை காதில் வைத்து பேசிக்கொண்டே பேருந்தை இயக்கினார். பேருந்தை இயக்கும்போது செல்போனை பயன்படுத்தும் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சமூக அமைப்பினரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: மாமல்லபுரம் செல்லும் மாநகரப் பேருந்தில் ஓட்டுநர் செல்போனில் ரியல் எஸ்டேட் விவிகாரம் பற்றி பேசிக்கொண்டே பேருந்தை இயக்கினார். இதனால் பயணிகள் அச்சத்துடன் பேருந்தில் அமர்ந்திருந்தனர் என்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர்கள் செல்போனில் பேசியபடி, பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கெனவே தமிழக போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. ஆனாலும் அதையும் மீறி சில ஓட்டுநர்கள் செல்போனில் பேசியபடி பேருந்துகளை இயக்குகின்றனர். முறையாக விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x