Published : 11 Jan 2021 03:25 AM
Last Updated : 11 Jan 2021 03:25 AM

சென்னை தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய 9 பேர் கும்பல் கைது

சென்னை தொழிலதிபர் உட்பட 3 பேரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டியது தொடர்பாக கோவை இந்து மகா சபை பிரமுகர் உள்ளிட்ட 9 பேரை சத்தியமங்கலம் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 6 பேரை தேடி வருகின்றனர்.

சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மோகன் (46). இவர் பழமை வாய்ந்த பொருட்களை வாங்கி சேமித்து வைப்பதில் ஆர்வம் கொண்டவர். இவரை ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மற்றும் கோவை இந்து மகா சபை பிரமுகர் பிரேம் ஆகியோர் தங்களிடம் பழமை வாய்ந்த பொருட்கள் இருப்பதாகக் கூறி அழைத்துள்ளனர்.

இதன்பேரில் கடந்த 7-ம் தேதி பண்ணாரியம்மன் கோயில் பகுதிக்கு தொழிலதிபர் மோகன் மற்றும் அவரது நண்பர் ரகுமான் உட்பட 3 பேர் வந்துள்ளனர். அங்கு திடீரென 3 கார்களில் வந்த மர்ம கும்பல் போலீஸார் எனக் கூறி, சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டதற்காக கைது செய்வதாகக் கூறி மோகன் உள்ளிட்ட 3 பேரையும் காரில் ஏற்றியுள்ளனர்.

பின்னர், சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகர் கிராமத்தில் அன்பு என்பவரது தோட்டத்தில் 3 பேரையும் அடைத்து வைத்துள்ளனர். மூவரையும் விடுவிக்க ரூ.5 கோடி கொடுக்க வேண்டும், இல்லையெனில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

மேலும், மோகனின் மனைவி வித்யாவை தொடர்பு கொண்ட கும்பல் ரூ.5 கோடி தரவில்லையென்றால் உங்கள் கணவரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். இதில் அச்சமடைந்த வித்யா 3 தவணைகளாக ரூ.21 லட்சத்தை, மர்ம கும்பலைச் சேர்ந்த தருமபுரி ரமேஷ் என்பவரது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வித்யா புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் போலீஸார் எனக் கூறி மர்ம கும்பல் மோசடியில் ஈடு பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ரஞ்சித் (எ) ரஞ்சித்குமார், கோவை இந்து மகா சபை பிரமுகர் பிரேம், தருமபுரி ரமேஷ், எரங்காட்டூர் ஜீவானந்தம், சபாபதி, கோபாலகிருஷ்ணன், சண்முகம், சேதுபதி, பாபு ராஜேஷ் குமார் ஆகிய 9 பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 சொகுசு கார், ரூ.9 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் இருடியம் தயாரிப்பதற்காக வைத்திருந்த மூலப்பொருட்கள், ஏமாற்றுவதற்காக இவர்கள் ஏற்கெ னவே தயார் செய்து வைத்திருந்த உபகரணங்கள், கெமிக்கல் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் கடத்தலில் 15 பேர் ஈடுபட்டதும், 6 பேர் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த கும்பல், தமிழகத்தில் பல்வேறு நபர்களிடம் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாகவும், அதனை விற்பனை செய்வதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x