

ஓசூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பருவமழை நன்கு பெய்துள்ளதால் மானாவாரியில் பயிரிட்டுள்ள மொச்சை அவரை சாகுபடியில் மகசூல் அதிகரித் துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், மத்திகிரி, கெலமங்கலம், தளி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, பாகலூர் பகுதிகளில் மானாவாரியில் தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் மொச்சை அவரை சாகுபடியில் ஆண்டுதோறும் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நடப் பாண்டில் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளதால் மொச்சை அவரை மகசூல் அதிகரித்துள்ளது.
ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலான செலவில் பயிரிடப்படும் மானாவாரி பயிராக மொச்சை அவரை உள்ளது. தற்போது சந்தையில் சில்லறை விலையில் ஒரு கிலோ மொச்சை அவரை ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுவதால் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் பறிக்கப்பட்ட மொச்சை அவரையை தோட்டத் தின் அருகிலேயே குவித்து வைத்து சில்லரை விலையில் ரூ.60-க்கு விற்பனை செய்து உடனுக்குடன் லாபம் ஈட்டி வரு கின்றனர்.
இதுகுறித்து சூளகிரி உதவி வேளாண் அலுவலர் தமிழ்வேந்தன் கூறியதாவது:
ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி முறையில் மொச்சை அவரை பயிரிடப்படுகிறது. நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை நன்கு பெய்துள்ளதால் மொச்சை அவரை மகசூல் அதிகரித்துள்ளது. ஒரு ஏக்கருக்கு 1.50 டன் முதல் 2 டன் வரை மகசூல் கிடைக்கிறது.
3 மாதம் தொடரும் மொச்சை அவரை அறுவடை, பொங்கல் முடிந்த பிறகும் 15 நாட்கள் நீடிக்கும். மொத்த விற்பனையில் விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.40 வரை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.