

மத்தியில் விரிவான தேசிய எரிசக்திக் கொள்கை வகுக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் உரையில் கூறப்பட்டுள்ளதை மின்துறை, தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை உரையாற்றினார். ‘புதிய ஆட்சியில் விரிவான தேசிய எரிசக்திக் கொள்கை வகுக்கப்படும். அதில் உள்கட்டமைப்பு, மனித ஆற்றல், தொழில்நுட்பம் போன்ற வற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்’ என்று குடியரசுத் தலைவர் உரையில் கூறப்பட் டுள்ளது. இந்த அறிவிப்புகளுக்கு மின் துறை, தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மின்சார நுகர்வோர் சங்க (TECA) முன்னாள் தலைவர் மகேந்திர ராமதாஸ்:
மத்திய அரசின் திட்டத்தை வரவேற்கிறோம். குறிப்பாக மனித ஆற்றல், தொழில்நுட்பம், உள்கட்டமைப்புக்கு முக்கியத் துவம் என்பது முன்னேற்றத்துக் கான வழியாகும். அதேநேரம் விரிவான தேசிய எரிசக்தி கொள்கையில், மாநிலங்களின் மின் துறை செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக மின் உற்பத்தி, பகிர்மானம், மின் தொடரமைப்பு ஆகியவற்றை பிரித்து செயல்படுத்தினால்தான் மின் துறை முன்னேற்றம் அடையும். இந்த மறுசீரமைப்பில் நிதியுதவியும் மிக முக்கியமான அம்சம். தற்போது தமிழகத்தில் மின் உற்பத்தி, பகிர்மானம், தொடரமைப்பு ஆகியவை மின் வாரியத்தின் கீழ், பெயரளவில் தனியாகவும், செயல்பாட்டில் ஒரே நிறுவனமாகவும் உள்ளது. இதை தனித்தனி செயல்பாடுகள் கொண்ட 3 நிறுவனங்களாக மாற்ற வேண்டும். மானிய விலை மின்சாரம், விவசாயம் மற்றும் குடிசைக்கான இலவச மின்சாரம் ஆகியவற்றுக்கான நிதியை அரசு முழுமையாக மின் வாரியத்துக்கு வழங்க வேண்டும். அப்படி வழங்காததால், மின் துறை நஷ்டத்தில் செயல்படுகிறது. எனவே, காங்கிரஸ் ஆட்சி கொண்டுவந்த மின் துறை நிதி சீரமைப்புத் திட்டம் இனி என்ன ஆகும் என்பதையும் மத்திய பாஜக அரசு விரைவில் முடிவு செய்ய வேண்டும்.
இந்திய காற்றாலைகள் சங்க (IWPA) தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன்:
மத்திய அரசின் சூரிய சக்தித் திட்டம், விரிவான தேசிய எரிசக்தி கொள்கை போன்றவை வரவேற்புக்கு உரியது. மேலும் மாசில்லாத, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையையும் வரவேற் கிறோம். காற்றாலைகளுக்கு துரித தேய்மான கணக்கீட்டு முறை 2012-ம் ஆண்டு வரை அமலில் இருந்தது. 80 சதவீத அளவுக்கு துரித தேய்மானம் கணக்கிடப்பட்டதால் குறுந் தொழில் நிறுவனங்கள்கூட காற் றாலைகளை நிறுவி வரிச் சலுகை பெற்றனர். இந்த முறையை காங்கிரஸ் அரசு ரத்து செய்துவிட்டது. வரிச் சலுகை கிடைக்காது என்பதால் காற்றாலை நிறுவுவதில் குறுந் தொழில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அந்த திட்டத்தை பாஜக அரசு மீண்டும் கொண்டுவர வேண்டும். இதேபோல, மரபு சார்ந்த மற்றும் மரபுசாரா எரிசக்தியை ஒன்றாக மின் தொகுப்பில் இணைப்பதை வரவேற்கிறோம்.
தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க (TASMA) தலைமை சட்ட ஆலோசகர் கே.வெங்கடாசலம்:
மரபுசாரா எரிசக்தியை மின் தொகுப்பில் இணைப்பதும், விரிவான எரிசக்திக் கொள்கை மூலம் மனித ஆற்றல், தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதும் சிறந்த முயற்சி. அனைத்து மாநில மின் தொகுப்பு இணைப்பையும் துரிதப்படுத்த வேண்டும்.