மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களின் பலன்களையும் மக்கள் அனுபவித்து வருகின்றனர்: எல்.முருகன் பேச்சு

மதுரை திருப்பாலையில் பாஜக நடத்திய பொங்கல் விழாவில் எல்.முருகன் பொங்கல் வைத்தார். | படம்: ஆர்.அசோக்
மதுரை திருப்பாலையில் பாஜக நடத்திய பொங்கல் விழாவில் எல்.முருகன் பொங்கல் வைத்தார். | படம்: ஆர்.அசோக்
Updated on
1 min read

மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களின் பலன்களையும் மக்கள் அனுபவித்து வருகின்றனர் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசினார்.

மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் திருப்பாலையில் நம்ம ஊர் பொங்கல் விழா மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் பாஜக தலைவர் எல்.முருகன் பேசியதாவது:

''திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தமிழ்க் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழித்து வருகின்றன. இலங்கைத் தமிழர்களுக்கு திமுக செய்த துரோகத்தை மறக்கவே முடியாது. திமுக ஆட்சியில் நில அபகரிப்பு அதிக அளவில் நடைபெற்றது. இதை விசாரிக்க ஜெயலலிதா ஆட்சியில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டது.

பிரதமர் மோடி மக்களுக்கு நல்லது செய்து வருகிறார். மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களின் பலன்களையும் மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு நல்லது நடக்கக்கூடாது என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். 2014-க்கு முன்பு விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் இருந்தது. அதன் பிறகு விவசாயிகள் தற்கொலை நடைபெறவில்லை. இதற்கு மத்திய பாஜக அரசே காரணம்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளனர். திமுகவின் தோல்வி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இதனால் தோல்வியை ஏற்க தயாராக இருக்குமாறு மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு எல்.முருகன் பேசினார்.

விழாவில் உரியடித்தல், கபாடி, கயிறு இழுத்தல், கோலம் போன்ற போட்டிகளும், கரகாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in