நிவர், புரெவி புயல்களின் தாக்கத்தால் தனுஷ்கோடிக்கு ஆமைகள் வருகை குறைவு

நிவர், புரெவி புயல்களின் தாக்கத்தால் தனுஷ்கோடிக்கு ஆமைகள் வருகை குறைவு
Updated on
2 min read

கடல் சுற்றுச்சூழல் சமன்பாட்டில் ஆமைகளின் பங்கு முக்கியமானது. மேலும், மீன் குஞ்சுகளை உட்கொண்டு மீன்வளத்தை அழிக்கும் ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உட்கொள்கின்றன. இதன் மூலம் மீன்வளம் காக்கப்படுகிறது. ஆனால், பருவநிலை மாற்றம், கடல் மாசுபடுதல், தடை செய்யப்பட்ட மீன்களை பிடித்தல் ஆகியவை கடல் ஆமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகி வருகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு, கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் ஆமை இனப்பெருக்க பகுதிகளாகக் கண்டறியப்பட்ட 90 இடங்களில் ஆண்டுதோறும் ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை விசைப்படகுகள், வெளியே இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளிட்டவை மூலம் கரையிலிருந்து 5 கடல் மைல் (9.26 கி.மீ.) தொலைவுக்கு, மீன் பிடிக்கத் தடை விதித்து தமிழக அரசு கடந்த 2017-ல் அரசாணை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் ஆமைகள் முட்டையிடும் இடமாக கன்னிராஜபுரம், மூக்கையூர், ஒப்பிலான், ஏர்வாடி, சேதுக்கரை, புதுமடம், மண்டபம், அரியமான் அழகன், ஆற்றங்கரை, புதுவலசை, பாம்பன், குந்துகால், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகள் கண்டறியப்பட்டன. பெருங்கடலில் காணப்படும் ஏழு வகையான கடல் ஆமைகளில், 5 வகையான ஆமைகள் இந்தியக் கடல் பகுதியில் வாழ்கின்றன.

இதில், இதய வடிவில், ஆலிவ் வண்ணத்திலும் இருக்கும் ஆலிவ் ரெட்லி டர்டில் எனப்படும் சிற்றாமை வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடற்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. இந்த பெண் கடல் ஆமைகள் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான இனப்பெருக்கக் காலங்களில், குறிப்பிட்ட கடற்கரைக்கு வந்து இரவில் கரையை நெருங்கி, ஆழக் குழிதோண்டி முட்டையிடுகின்றன. இந்த ஆண்டு இனப்பெருக்க காலத்தின் 2 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஆமைகளின் வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டதால் இயற்கை ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பெண் ஆமைக் குஞ்சுகள் எந்தக் கடற்கரையில் பிறந்தனவோ, அதே கடற்கரையிலேயே வளர்ந்து கருத்தரித்த பிறகு மீண்டும் முட்டையிடக்கூடிய வழக்கத்தைக் கொண்டவை. தமிழகத்தில் ஆமைகள் அதிகளவில் முட்டையிட கூடியப் பகுதிகளில் ஒன்றாக தனுஷ்கோடி பகுதி உள்ளது. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 15 ஆயிரம் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த முட்டைகள் முகுந்தராயர் சத்திரத்தில் உள்ள பொறிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு பின்னர் முட்டைகளில் இருந்து ஆமைகள் வெளியே வந்ததும் கடலில் விடப்படுகின்றன.

ஆனால் இந்த ஆண்டு நிவர், புரெவி புயல்களின் தாக்கத்தால் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்களால் ஆமைகளின் வருகை தனுஷ்கோடி கடற் பகுதியில் இன்னும் தொடங்கவேயில்லை. அதேசமயம், ஆமைகள் வரத்தை எதிர்பார்த்து வருகிறோம் என்றார். கடலில் தூய்மைப் பணிகளை ஆமைகளும் செய்வதால், அவைகளுக்கு கடல் தூய்மைப் பணி யாளர்கள் என்ற பெயரும் உண்டு. இதனால் கடல் ஆமைகளை பாதுகாப்பது அவசியம். பாதுகாக்கப்பட்ட ஆமை இனமாக அறிவிக்கப்பட்ட சிற்றாமைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in