

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் தொடர்ந்து அதிமுக, திமுகவினர் மோதி வருவதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.
திருப்பத்தூர் தொகுதியில் இதுவரை 15 பொதுத்தேர்தல், ஒரு இடைத்தேர்தல் நடந்துள்ளன. இதில் திமுக 8 முறையும், அதிமுக, காங்கிரஸ் தலா 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட், சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2001-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு இத் தொகுதியை அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை.
கடந்த 2006, 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களிலும் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனே வெற்றி பெற்றுள்ளார். இதனால் இந்த முறை எப்படியாவது திருப்பத்தூர் தொகுதியைக் கைப்பற்ற அதிமுகவினர் ஓராண்டுக்கு முன்பே தங்களது தேர்தல் பணியைத் தொடங்கி விட்டனர்.
அதிமுகவில் சீட் பெற கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த ஆவின் தலைவர் அசோகன், மாநிலச் செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன். மணி பாஸ்கரன், சிங்கம்புணரி ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யாபிரபு உள்ளிட் டோர், தங்களது ஆதரவாளர்கள் மூலம் தலைமையிடம் காய் நகர்த்தி வருகின்றனர்.
மேலும் திமுக முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனும் 4-வது முறை யாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதனால் சில மாதங்களாகவே திருப்பத்தூர் தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் அதிமுக, திமுகவினர் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. சின்னகுன்னக்குடியில் நடந்த ரேஷன் கடை திறப்பு விழாவில், மக்கள் பிரதிநிதி யாக இல்லாத மருதுஅழகுராஜ் பங்கேற் கக் கூடாது என கே.ஆர்.பெரிய கருப்பன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அதேபோல், கடந்த வாரம் முசுண்டம் பட்டியில் நடந்த மினி கிளினிக் திறப்பு விழாவில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் முன்னிலையிலேயே மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரனுக்கும், கே.ஆர்.பெரியகருப்பனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் அதிமுக, திமுகவினர் மோதிக்கொண்டனர்.
சில மாதங் களுக்கு முன்பு, சில அரசு விழாக்களுக்கு எம்எல்ஏவாக இருக்கும் கே.ஆர்.பெரியகருப்பனை அழைக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் திமுகவினர் முறையிட்டனர். இதேபோல் தொடர்ந்து அதிமுக, திமுகவினர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருவதால் திருப்பத்தூர் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அதிமுக, திமுக பிரச்சினையால் திருப்பத்தூர் தொகுதியில் அரசு விழாவை நடத்த அதிகாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.