Published : 10 Jan 2021 02:03 PM
Last Updated : 10 Jan 2021 02:03 PM

மல்லிகை வரத்து குறைவால் பூ விற்பனையில் முதலிடத்தை பிடித்த ‘செவ்வந்தி’- விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டத்தில் செவ்வந்தி பூ விளைச்சல் வெகுவாக அதிகரித்துள்ளது. மல்லிகை உள்ளிட்ட பல பூக்கள் பனிக்கு கருகி, வளர்ச்சி குன்றியுள்ளதோடு, விளைச்சலும் குறைந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பல்லவராயன் பட்டி, சின்னமனூர், கோட்டூர், உப்புக் கோட்டை, பாலார்பட்டி, வேப்பம்பட்டி, கோம்பை, ஆண்டிபட்டி, துரைசாமிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பூ விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ, கனகாம்பரம், செண்டுமல்லி, சம்பங்கி, ரோஜா, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு பூக்கள் அந்தந்த பருவத்திற்கு ஏற்ப பயிரிடப்படுகிறது.

தற்போது பல பகுதிகளிலும் செவ்வந்திப்பூ விவசாயம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்கழி மற்றும் ஐயப்பன் கோயில் சீசனுக்காக கடந்த ஆவணி மாதம் நாற்றுக்களாக விதைத்துள்ளனர். தற்போது அறு வடைக்காக இப்பூக்கள் தயார் நிலை யில் உள்ளன. இவற்றை பறித்து விற்பனைக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிக பனியினால் மல்லிகை உள்ளிட்ட பல பூக்களின் வளர்ச்சி பாதித்த நிலையில் செவ்வந்தி அதிகளவில் விளைந்ததால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்து வருகிறது.

இது குறித்து உப்புக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி வேலம்மாள் கூறுகை யில், ஓசூர் ஒட்டு ரக கன்றுகளை நடவு செய்தோம். ஒரு நாற்றில் அதிக சிம்புகள் முளைத்து பூக்கும். அதிக பனி போன்றவற்றினால் மல்லிகை விளைச்சல் பாதித்துள்ளது. ஆனால் இந்த பருவத்தை எதிர்கொண்டு செவ்வந்தி நன்கு விளைந்துள்ளது. தற்போது சீசன் நேரம் என்பதால் கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை ஆகிறது.

செடியில் இப்பூவை நுட்பமாக கொய்து எடுக்க வேண்டும். எனவே வேலையாட்களுக்குப் பதிலாக குடும்பத்தில் உள்ளவர்களே கதிர் அரிவாள் மூலம் பூப்பறிப்போம். செடி அதிகம் அதிர்ந்தால் மொட்டுக்களும், மலர வேண்டிய பூக்களும் உதிர்ந்து விடும். இதனால் பொறுமையாக வேலை செய்ய வேண்டும். கடந்த சீசனில் கரோனா உள்ளிட்ட பிரச்சினையால் பூக்களை சந்தைப் படுத்துவதில் சிரமம் இருந்தது. தற்போது விற்பனை நன்றாக உள்ளது. தொடர்ந்து 2 மாதம் வரை மகசூல் இருக்கும் என்றார். பூ வியாபாரிகள் கூறுகையில், கூடுதல் பனியினால் மல்லிகைப்பூ வரத்து முற்றிலும் குறைந்து விட்டது.

இதனால் கிலோ ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் சென்று விட்டது. பெரும்பாலான பூக்களின் வரத்து குறைந்துள்ள நிலையில் செவ்வந்தியே தற்போது அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. மற்ற பூக்களின் விலை மிக அதிகமாகவும், வரத்தும் குறைந்து விட்டதால் பெண்கள் செவ்வந்தியையே சூடிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு மஞ்சள், வெள்ளை நிற செவ்வந்திகளே இருந்த நிலையில் தற்போது ஊதா, சிவப்பு, ஆரஞ்சு என்று பல வண்ணங்களில் விளைவிக்கப் படுகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x