Published : 10 Jan 2021 01:49 PM
Last Updated : 10 Jan 2021 01:49 PM

புவிசார் குறியீடு பெற்றும் கொடைக்கான‌ல் ம‌லைப்பூண்டு விலை வீழ்ச்சி: விளைச்சலும் இல்லை, விலையும் இல்லாததால் விவசாயிகள் கவலை 

கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைந்த மலைப்பூண்டை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

கொடைக்கானல் 

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் புவிசார்குறியீடு பெற்ற மலைப்பூண்டு போதிய விளைச்சல் இல்லாதநிலையில், வெளிமாநில பூண்டு வருகையால் விலையும் இல்லாததால் மலைவிவசாயிகள் கவலையடைந் துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப்பகுதிகளான பூம்பாறை, பூண்டி, கவுஞ்சி,மன்னவனூர், கூக்கால், பழம்புத்தூர், வில்பட்டி உள்ளிட்ட மலைகிராமங்களில் அதிகளவில் பூண்டு சாகுபடி நடக்கிறது. 120 நாட்களில் அறுவடை செய்யும் பயிரான பூண்டு விளைச்சல் சீராக இருப்பதால் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு போதுமான லாபத்தை தந்துவந்தது.

மற்ற பூண்டுகளை விட கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் பூண்டுகளுக்கு அதிக மருத்துவகுணம் உள்ளது. மேலும் 100 ஆண்டுகளுக்கு மேலாக பயிரிடப்பட்டு வரும் பயிர் என்பதால் இதற்கு புவிசார் குறியீடும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. புவிசார் குறியீடு பெற்றதால் நிரந்தர விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பினர். கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் பூண்டுகள் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு சென்று அங்கு மொத்தமாக விற்பனை செய்கின்றனர். அதிகபட்சமாக ஒரு கிலோ பூண்டு ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையாகும்.

தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாகவும், வடகிழக்கு பருவமழை காலம் முடிந்தும் மழை பெய்துவருவதால் பூண்டு விளைச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அறுவடையின்போது போதிய பருமன் இல்லாமல் பூண்டுகள் சிறுத்து காணப்படுகின்றன. விளைச்சல் பாதிப்புக்குள்ளான நிலையில் பற்றாக்குறை காரணமாக விலையாவது அதிகரிக்கும் என்று நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம் மார்க்கெட்டிற்கு வெளிமாநில பூண்டுகள் வருகை அதிகரித்ததால் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு போதிய விலை கிடைக்காத நிலை நிலவுகிறது.

ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ.150 வரை மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பூண்டு விவசவாயிகள் கூறுகையில், சாகுபடி செய்த செலவைக்கூட எடுக்க முடியாதநிலையில் பூண்டு விலை தற்போது உள்ளதால் இழப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவகுணம் நிறைந்த கொடைக்கானல் மலைப்பூண்டிற்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய அரசு முன்வர வேண்டும். அப்போது தான் பூண்டு விவசாயிகள் நிலையான வருவாய் பெறமுடியும். இல்லாவிட்டால் பூண்டு விவசாயிகள் பயிரிடும் பரப்பை குறைத்துக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். இதை தவிர்க்க பூண்டு விவசாயிகளுக்கு தேவையான கிட்டங்கி வசதி, கொடைக்கானலிலேயே சந்தைப்படுத்தும் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித்தர வேண்டும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x