Published : 10 Jan 2021 01:37 PM
Last Updated : 10 Jan 2021 01:37 PM

புறவழிச்சாலை பணிகள் முழுமையடைவதற்கு முன்பே விதிமீறி செல்லும் வாகனங்கள்: எச்சரிக்கையை புறக்கணிப்பதால் ஏற்படும் விபத்துகள்

திண்டுக்கல்-குமுளி சாலை விரிவாக்கப் பணி உத்தமபாளையத்தில் நடைபெற்று வருகிறது. பணி முடிவடையாத நிலையில் நெடுஞ்சாலைத்துறையினரின் எச்சரிக்கையை மீறி இச்சாலையில் உள்ளூர் வாகனங்கள் சென்று வருகின்றன.

திண்டுக்கல்-குமுளி சாலை விரிவாக்கப் பணி இன்னும் முடிவடையாத நிலையில், உத்தமபாளையம் பகுதியில் உள்ளூர் வாகனங்கள் இச்சாலையை பயன்படுத்துவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. தேனி மாவட்டம், கேரள மாநில எல்லையில் அமைந்திருப்பதால் இருமாநில போக்குவரத்துகள் அதிகம் உள்ளன.

சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள் அதிகம் உள்ளதாலும், ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக உள்ளதாலும் சாலை போக்குவரத்தை மட்டும் சார்ந்தே இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. மாவட்டத்தின் பல ஊர்களிலும் புறவழிச்சாலை இல்லாததால் சரக்கு, சுற்றுலா மற்றும் வெளியூர் வாகனங்கள் நகருக்குள்ளேதான் செல்ல வேண்டி உள்ளது.

எனவே தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்களை இணைக்கும் குமுளி-திண்டுக்கல் சாலை விரிவாக்கப் பணி 2010-ல் ரூ.333.18 கோடி மதிப்பீட்டில் துவங்கியது. முதற்கட்டப்பணிகள் திண்டுக்கல்லில் இருந்து தேவதானப்பட்டி வரை முடிந்த நிலையில் தேனி மாவட்டத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறன. தற்போது பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் என்று பல பகுதிகளிலும் புறவழிச்சாலைப் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இருப்பினும் ஆங்காங்கே ஜல்லி கொட்டுதல், தார் ஊற்றுதல், மண் மேவுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் உள்ளூர் வாகனங்கள் இப்போதே இச்சாலையை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கி உள்ளன. குறிப்பாக தேனி அருகே மதுராபுரி, வீரபாண்டி, உத்தமபாளையம், சின்னமனூர் புறவழிச் சாலைகளில் இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அல்லிநகரத்தில் சாலை அமைப்பு வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே விரிவாக்கப் பணி முழுமையாக முடிவடைந்த பிறகே இச்சாலையைப் பயன்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்த எச்சரிக்கை அறிவிப்புகளும் இச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் உள்ளூர் வாகன ஓட்டிகள் இவற்றை கண்டுகொள்வதே இல்லை. தொடர்ந்து இச்சாலையில் அதிவே கமாக சென்று கொண்டிருக்கின்றனர்.நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், “சாலைப் பணி முழுமையாக முடியவில்லை. டிப்பர் லாரிகள், மண் அள்ளும் இயந்திரம், தார் ஊற்றும் லாரிகள் என்று ஏராளமான கனரக வாகனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன, எனவே பிற வாகனங்கள் இச்சாலைக்குள் வர வேண்டாம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x