

போடி அருகே உள்ள குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேஷனிற்கு இதுவரை சாலை அமைக்கப் படாததால், இப்பகுதி மக்கள் வனப்பகுதியில் உள்ள ஆபத்தான ஒற்றையடிப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவசர சிகிச்சை கூட பெற முடியாத நிலை உள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது டாப் ஸ்டேஷன்.
இதனைச் சுற்றிலும் எல்லப்பை, குண்டலை, சிட்டிவாரை, வட்டவடை, செருவாரை, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 26 நிறுவனங்களைச் சேர்ந்த தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு போடி, தேவாரம், சிலமலை, சின்னமனூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். பல தலைமுறைகளாக இவர்கள் அங்குள்ள குடியிருப்பு களில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
விடுமுறை, குடும்ப நிகழ்ச்சி, பண்டிகை போன்ற காலங்களில் இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனர்.குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் வரை இவர்களுக்கு சாலை வசதி கிடையாது. வனப்பகுதியில் உள்ள ஒற்றையடிப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். வாகனம் மூலம் இவர்கள் டாப் ஸ்டேஷன் செல்ல வேண்டும் என்றால் போடியில் இருந்து முந்தல், போடிமெட்டு, நெடுங்கண்டம், மூணாறு வழியாக ஏறத்தாழ 80 கி.மீ.க்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டும். இதனால் 4 மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. சுற்றி செல்வதால் நேர விரயம், அதிக செலவு உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளதால் இவர்கள் 7 கி.மீ. தூரம் வனப்பகுதி வழியே நடந்து சென்று வருகின்றனர்.
மருத்துவம், அவசரம், தொடர் மழை போன்ற நேரங்களில் குறிப்பாக இரவில் இப்பாதையை கடக்க முடியாத நிலை உள்ளது. விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பகலிலும் இவர்கள் அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. இங்குள்ள முதுவான்குடி, முட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தனியார் நிலங்கள் உள்ளன. இங்கு இலவம், காபி, பலா, ஏலக்காய், பீன்ஸ் உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. பாதை வசதி இல்லாததால் விளைபொருட்களை குரங்கணி வழியே போடி, தேனி பகுதிகளுக்கு கொண்டு வர விவசாயிகள் சிரமப்படுகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள், விளைபொருட்கள் உள்ளிட்டவையும் குதிரை மூலமே கொண்டு செல்லப்படுகின்றன.
மருத்துவம் போன்ற அவசர நேரங்களில் நோயாளிகளை டோலி கட்டியே குரங்கணிக்கு கொண்டு செல்கின்றனர். எனவே விவசாயிகள், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் பகுதிக்கு சாலை வசதி அமைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது குரங்கணியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் வனத்துறை சோதனைச் சாவடி வரை ஜீப் செல்வதற்கான பாதை உள்ளது. அதற்குப் பிறகு பாதை வசதி இல்லை.
டாப்ஸ்டேஷன் வரை பாதை அமைத்து பொதுப் பயன்பாட்டிற்குத் திறந்துவிட வேண்டும். இப்பாதை அமைவதின் மூலம் குரங்கணியில் இருந்து மூணாறுக்கு 25 கி.மீ. தூர பயணத்தில் சென்று விட முடியும். இதனால் சுற்றுலா மூலம் தமிழக அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். மூணாறு செல்வதற்கான மாற்றுப் பாதையாகவும் இது அமையும் இந்நிலையில் இதற்கான சர்வே பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிந்துள்ளது. இருப்பினும் 2 கி.மீ. தூரம் வனத்துறைக்குச் சொந்தமான இடமாக உள்ளதால் சாலை அமைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே போடி தொகுதியில் பல ஆண்டுகளாக நிலவி வரும் இப்பிரச்னைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.