

கொடைக்கானலில் தொடர் மழைபெய்து வருவதால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறை சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்ட நிலையிலும், பனி, தொடர் மழையை பொருட்படுத்தாது நேற்று கொடைக்கானலுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை இருந்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடு காரணமாக கோடை சீசனுக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு வாரவிடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கொடைக் கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்துவருகிறது.
இதனால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் சாலையோரம் உள்ள மரங்கள் சாய்ந்துவிழ வாய்ப்பு உள்ளது என்பதால் 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள குணா குகை, பைன்பாரஸ்ட், மோயர் பாய்ண்ட், பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு நேற்று முதல் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கொடைக் கானலில் உள்ள பிற சுற்றுலாத்தலங்களான பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், செட்டியார் பூங்கா, குறிஞ்சியாண்டவர் கோயில், ஏரிச்சாலைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
நேற்றும் கொடைக்கானலில் விட்டு விட்டு சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்தது. அதிகாலை மற்றும் இரவில் பனிப்பொழிவும் இருந்தது. பனி, தொடர் மழையை பொருட்படுத்தாமல் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை இந்த வாரமும் அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக பகலில் 16 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக இரவில் 11 டிகிரி செல்சியசும் வெப்பநிலை இருந்தது. இதனால் இரவில் கடும் குளிர் நிலவியது. வழக்கமாக மார்கழி மாதத்தில் பனிப்பொழிவு அதிகம் காணப்பட்டு மழை இல்லாத நிலை நிலவும். ஆனால் இந்த ஆண்டு பனிப்பொழிவு குறைந்து மழைப் பொழிவு அதிகமாக உள்ளது.