வாரம் ஒரு கிராமம் அறிவோம்: வள்ளலாருக்கு தானம் தந்த பார்வதிபுரம் மக்கள் 

மேளதாளம் முழங்க தைப்பூச கொடியேற்றத்திற்கு சீர் வரிசை தட்டுடன் வரும் பார்வதிபுரம் கிராம மக்கள்.
மேளதாளம் முழங்க தைப்பூச கொடியேற்றத்திற்கு சீர் வரிசை தட்டுடன் வரும் பார்வதிபுரம் கிராம மக்கள்.
Updated on
1 min read

சிதம்பரம் அருகே மருதூர் கிராமத்தில் பிறந்தவர் அருட்பிரகாச வள்ளலாளர். 33 ஆண்டுகள் (1825-58) சென்னையில் வாழ்ந்தார். அப்போது, திருவருட்பாவின் முதல் மூன்று திருமுறைகளை எழுதினார். 1857-67 ஆண்டுகளில் வடலூர் அருகேயுள்ள கருங்குழியில் வாழ்ந்தார்.

1865ம் ஆண்டு சமரச சன்மார்க்க சங்கத்தை தொடங்கினார். தொடர்ந்து 4 மற்றும் 5ம் திருமுறைகளை எழுதினார். 1867- 87 ஆண்டு வரை வடலூரில் வாழ்ந்தார். அப்போது அவர், வடலூர் அருகே உள்ள பார்வதிபுரம் கிராம மக்களை அங்குள்ள மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து தன் கருத்துக்களையும், கொள்கைகளையும் எடுத்துக் கூறி, அதை இவ்வுலகிற்கு எடுத்துச் சொல்ல இடம் தருமாறு கேட்டுள்ளார்.

பார்வதிபுரம் கிராம மக்கள் அருட்பிரகாச வள்ளலாரின் கருத்துக்களை உள் வாங்கி, 81 காணி நிலத்தை அவருக்கு எவ்வித தொகையும் பெறாமல் தங்களது சொந்த செலவில் கிரையம் செய்து கொடுத்தனர். அருட்பெரும் ஜோதி தனிப்பெருங் கருணையின் தொடக்கப் பெரு வெளியாக அந்த இடம் உருவானது. அங்கு தான் வள்ளலார் சத்திய ஞானசபை, சத்திய தரும சாலையை நிறுவினார்.

தைப் பூச நன்னாளில் இங்கு நடக்கும் ஜோதி தரிசனம் உலகப் பிரசித்தம். சத்திய ஞான சபைக்கு இடமளித்த பார்வதிபுரம் கிராம மக்களை கவுரவப் படுத்தும் (அங்கீகரிக்கும் வகையில்) வகையில், தைப்பூச நன்னாளின் முந்தைய நாள் நடைபெறும் கொடியேற்றும் உரிமையை அக்கிராம மக்களுக்கு வழங்கினார் வள்ளலார்.

தைப்பூச கொடியேற்றம் அன்று பார்வதிபுரம் கிராம மக்கள் அந்த ஊர் மாரியம்மன் கோயிலில் இருந்து சீர் வரிசை தட்டு மற்றும் சன்மார்க்க கொடியுடன் ஊவலமாக வருவதுண்டு.

அவர்களை வடலூர் தெய்வநிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எதிர்கொண்டு வரவேற்று அழைத்துச் செல்வர். சத்திய ஞானசபையில் உள்ள சன்மார்க்க கொடியை பார்வதிபுரம் கிராம பெரியோர் ஏற்றுவர். “சத்திய ஞான சபை தொடங்கியது முதல் இவ்வழக்கத்தை செய்து வரும் எங்கள் கிராமத்தினர், இதை தங்களுக்கான அங்கீகாரமாகவும், தெய்வநிலையத்தின் மீது தங்கள் கிராமத்தினருக்கு உள்ள உரிமையாகவும், பெரும்பாக்கியமாகவும் கருதுகிறார்கள்” என்கிறார் பார்வதிபுரத்தை சேர்ந்தவரும் சுத்த சன்மார்க்க சத்திய தலைமை சங்கத்தின் நிர்வாகியுமான எம்.கே.பார்த்திபன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in