

தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் எத்தனையோ இருக்க, நம் உணர்வோடு கலந்த ஒன்றாகிப் போனது ‘பிரியாணி’. அனைத்து மட்டங்களிலும் இரண்டற கலந்த இன்ப நிகர் உணவாக மாறி விட்டது. கிராமங்களின் கிடா விருந்து நிகழ்வில் கூட பிரதான இடத்தைப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது ‘பிரியாணி’.
விருந்து, உபசரிப்பு என்றால் ‘பிரியாணி’ தவிர்க்க முடியாததாகி விட்டது. அடுத்த 4 மாதங்களுக்கு அரசியல் கட்சிகளின் ஆராவாரத்துடன் விருந்தும் வீதிக்கு வீதி பட்டையைக் கிளப்பும். கூடும் கூட்டமோ, கூட்டும் கூட்டமோ அவர்களை வெறும் கையோடு மட்டுமல்ல; வெறும் வயிறோடும் அனுப்பக் கூடாது என்ற ஒழுக்க நியதியை அனைத்துக் கட்சிகளும் தற்போது கடைபிடிக்கின்றன.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக அதிமுக நிர்வாகிகள் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இக்கூட்டங்களில் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பதால் கிளைக்கழக, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் தங்களின் பலத்தைக் காட்ட கூட்டத்தை அழைத்து வருகின்றனர். அவ்வாறு வருவோரை, ‘பிரியாணி வித் வாட்டர் பாட்டில்’ உடன் அனுப்பி வைக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். இதனால், பிரியாணி அண்டாவோடு எப்போதும் பிஸியாகவே இருக்கின்றனர் மாஸ்டர்ஸ். இப்படியான ஒரு அரசியல் நிகழ்வுக்கு வந்திருந்த விருத்தாசலத்தைச் சேர்ந்த பிரியாணி மாஸ்டர் ஹஜ் முகமதிடம் பேசினோம்.
“எங்களுக்கு அதிக ஆர்டர் அளிப்பதில் முன்னணியில் இருப்பது அதிமுக. அதையடுத்து திமுக. தற்போது தினகரனின் அமமுகவும் ஆர்டர் கொடுத்திருக்கின்றனர். கரோனாவால 8 மாசமா முடங்கி கிடந்தோம். இப்ப தான் கொஞ்சம் வருமானத்துக்கு வழி கிடைச்சிருக்கு. கல்யாணம், காட்சின்னு அப்பப்ப வந்தாலும், இதுமாதிரி பெருசா ஆர்டர் வர்றப்ப எங்களுக்கு வருமானமும் நல்லா வரத் தொடங்கியிருக்கு.
நமக்காக வர்றவங்களுக்கு வயிராற சாப்பாடு போடணும்ங்கிற நினைப்பு எல்லா கட்சிக்காரங்ககிட்டேயும் வந்திருக்கு. கடந்த எம்.பி எலெக்ஷன்ல கட்சிக்காரங்க இந்த விஷயத்துல கொஞ்சம் லேட்டாதான் இறங்குனாங்க. ஆனா, இப்ப முன்னாடியே இறங்கிட்டாங்க. நாங்க மட்டுமில்ல இந்த தொழில சார்ந்து இருக்குற வாடகைப் பாத்திரம், அடுப்புக்கடைக்காரர், சமையல் உதவியாளர், கறிக் கடைன்னு எல்லாருமே அடுத்த நாலு மாசத்துக்கு பிஸிதான்.” என்கிறார் ஹஜ் முகமது.