

மார்க்கெட் இல்லாத நகரங்கள் கிடையாது. காந்தி மார்க்கெட், காமராஜர் மார்க்கெட், அண்ணா மார்க்கெட் என ஊர்கள் தோறும் மார்க்கெட் இருப்பதை பார்த்திருப்போம். நமது பாரம்பரியம் மிக்க கடலூர் நகரின் மையப் பகுதியில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது ‘பான்பரி மார்க்கெட்’.
‘அட, பெயர் வித்தியாசமாக இருக்கிறதே!’ என்று மார்க்கெட்டை கடந்து செல்லும் போது நீங்கள் யோசித்திருக்கலாம். எதற்காக இந்த மார்க்கெட்டிற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது? இதை தெரிந்து கொள்ள, கொஞ்சம் கடலூர் நகர வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கலாம். அந்த நாள், 1911-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி...
அன்றைய தினம் கடலூர் நகரம் மிகவும் பரபரப்பாக ஒரு நிகழ்வுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அன்று மதியம் கடலூருக்கு வருகை தந்தார் சென்னை மாகாண கவர்னர் ஆர்தர் லாலி. அவரை அன்றைய தென்னார்க்காடு மாவட்ட கலெக்டர் எம். அஸிசுதீன் வரவேற்று, அழைத்து வந்தார். கடலூர் நகராட்சி அலுவலகத்தில் வரவேற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய கடலூர் நகராட்சித் தலைவர் அ. சுப்பராயலு ரெட்டியார், மாவட்ட துணை ஆட்சியர் வி. சீனிவாச்சாரியார் மற்றும் திருவண்ணாமலை நகராட்சித் தலைவர் வி. சொக்கலிங்கம் பிள்ளை உள்ளிட்டோர் அவ்விழாவில் பங்கேற்றிருந்தனர்.
அனைவரும் தங்களது பேச்சில் கடலூர் நகரின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துரைத்தனர். அவ்விழாவில் சுப்பராயலு ரெட்டியாருக்கு ‘ராவ் பகதூர்’ என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்துப் பேசிய கவர்னர், “பண்ருட்டி முதல் திருச்சிராப்பள்ளி வரையிலான இரயில்வே வழித்தடம் விரைவில் அமைக்கப்படும்” என்றார்.
அடுத்த நாள் காலை கடலூர் சிறைச்சாலையைப் பார்வையிட்ட பின்னர், கவர்னரின் கார் சென்ற இடம் ‘பான்பரி மார்க்கெட்’. அங்கு அமைக்கப்பட்டிருந்த மணிக்கூண்டு கோபுரத்தை கவர்னர் திறந்து வைப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. அப்போது பேசிய சுப்பராயலு ரெட்டியார், பான்பரி மார்க்கெட் மற்றும் அதன் மையத்திலிருக்கும் மணிக்கூண்டின் வரலாற்றை எடுத்துரைத்தார்.
கடலூர் மக்களின் நீண்டகாலத் தேவையை நிறைவேற்றும் பொருட்டு கடலூர் நகராட்சியால் மொத்தம் ரூ.34 ஆயிரம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த மார்க்கெட்டிற்கு கடலூரின் முன்னாள் கலெக்டரும், கடலூர் மக்களின் மீது பேரன்பு கொண்டிருந்தவருமான ஜார்ஜ் பான்பரி தனது சொந்தப் பணம் 1,100 டாலர்களைக் கொடுத்ததையும், அதன் காரணமாகவே இந்த மார்க்கெட்டைக் கட்டுவது சாத்தியமானது என்பதையும் எடுத்துரைத்தார்.
பின்னர் இப்போது மணிக்கூண்டு திறப்பு விழாவில் பேசிய கவர்னர் ஆர்தர் லாலி, ஜார்ஜ் பான்பரியின் தாராள கொடையுள்ளத்தை வெகுவாகப் பாராட்டி, “இப்பணியில் என்னையும் இணைத்துக் கொள்வதில் பெருமையடைகிறேன். ஜார்ஜ் பான்பரி மிகவும் நேசித்த இந்த கடலூர் நகரம் ஆண்டாண்டு காலத்திற்கு அவருடைய பெயரைப் பெருமையுடன் நினைவு கூறும்” என்றார். “அவரின் பெயருடன் தான் இப்போதும் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறது ‘பான்பரி மார்க்கெட்’. ஜார்ஜ் பான்பரியின் கொடையுள்ளத்தை அது நமக்கு நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது” என்கிறார் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் முனைவர் நா. சேதுராமன்.
உதவியாளராக தொடங்கி உச்சம் தொட்டவர்
1850-ம் ஆண்டு தென்னார்க்காடு மாவட்ட கலெக்டரின் உதவியாளராகத் தனது பணியைத் தொடங்கிய ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலரான
ஜார்ஜ் பான்பரி, தனது திறமையால் பல்வேறு உயர் பதவிகளை அடைந்தார்.
1858-ல் வட ஆற்காடு மாவட்டத்தின் கூடுதல் உதவி கலெக்டராகவும், 1863-ல் கர்னூல் மாவட்ட கலெக்டராகவும், 1864-ல் வட ஆற்காடு மாவட்ட கலெக்டராகவும், 1865-ல் திருநெல்வெலி மாவட்டம் பின்னர் கடலூர் மாவட்டத்தின் கலெக்டராகவும், 1866-ல் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராகவும்,
1872-ல் வருவாய் திட்ட இயக்குநராகவும் பணியாற்றி,
1876-ல் பணி ஓய்வு பெற்றார்.