கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காவிட்டால் அரசியல் ரீதியாக பாமக முடிவு எடுக்கும்: இணையவழியில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம்

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காவிட்டால் அரசியல் ரீதியாக பாமக முடிவு எடுக்கும்: இணையவழியில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம்
Updated on
2 min read

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால், அரசியல் ரீதியிலான முடிவு எடுக்கப்படும் என்று பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக, வன்னியர் சங்கம் சார்பில் இதுவரை 5 கட்டங்களாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், முதல்வர் பழனிசாமியை பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த 8-ம் தேதி சந்தித்து இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வருடன் அடுத்தகட்ட பேச்சு நடத்த உள்ளதாக பின்னர் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, பாமக நிர்வாகக் குழு கூட்டம் நேற்று பகல் 11 மணிஅளவில் இணையவழியில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி முன்னிலையில் நடந்த இக்கூட்டத்துக்கு தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் தீரன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் ச.சிவப்பிரகாசம் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம்:

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 141 சாதிகள், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவில் 7 சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 47 சாதிகள், சீர்மரபினர் பிரிவில் 68 சாதிகள் உள்ளன.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீடு தானாக கிடைத்துவிடவில்லை. ராமதாஸ் தலைமையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. போலீஸ் துப்பாக்கிச்சூடு, தாக்குதலில் 21பேர் உயிரிழந்துள்ளனர். பாளையங்கோட்டை மத்திய சிறை தவிர, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் ராமதாஸ் சிறை தண்டனை அனுபவித்தார். பல ஆயிரம்பாட்டாளி சொந்தங்கள், இளைஞர்கள் வழக்குகளை சந்தித்து, சிறைதண்டனை அனுபவித்தது போன்றதியாகங்களால்தான் 1989-ல் 20 சதவீத இடஒதுக்கீடு சாத்தியமானது.

வன்னியர்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டிய அந்த இடஒதுக்கீட்டை, இப்போது 115 சாதிகள் அனுபவிக்கின்றன. ஆனால் வன்னியர்கள் தவிர, இந்த சாதிகளில் ஒன்றுகூடநாம் நடத்திய இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ளவோ, ஆதரிக்கவோ இல்லை. அதேநேரம், இடஒதுக்கீட்டை போராடிப் பெற்ற வன்னியர்களுக்கு அதில் சிறிதளவுகூட கிடைப்பதில்லை.

வன்னியர் தனி இடஒதுக்கீட்டு பிரச்சினைக்கு 1989-ம் ஆண்டேதீர்வு காணப்பட்டு இருக்க வேண்டும். அப்போது கருணாநிதி அடுக்கடுக்காக செய்த துரோகங்களால் வன்னியர்களுக்கு இன்றுவரைஉரிய சமூகநீதி கிடைக்கவில்லை.வன்னியர்களுக்கு உரிய சமூகநீதியை அரசு இனியும் மறுப்பது நியாயம் அல்ல. போராடிப் பெற்ற20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உரிய பங்கு வழங்கப்படவேண்டும். வன்னியர்களுக்கு 20சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்திவந்த ராமதாஸ், இப்போது உள் ஒதுக்கீட்டை ஏற்கத் தயார் என்று அறிவித்துள்ளார்.

அதை பயன்படுத்தி, வன்னியர்களின் உள் ஒதுக்கீடு கோரிக்கையை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களின் சமூகநீதிக்கான, பாமகவின் இந்தநியாயமான, எளிய கோரிக்கையை பொங்கலுக்குப் பிறகு நடக்க உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்ய தாமதமானால் பாமக செயற்குழுவை உடனே கூட்டி, அரசியல் ரீதியிலான அடுத்தகட்ட முடிவை எடுப்பது என்று பாமக நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in