Published : 14 Oct 2015 12:26 PM
Last Updated : 14 Oct 2015 12:26 PM

எழுத்தாளர்களை மத்திய அமைச்சர் மிரட்டுவதா?- மார்க்சிஸ்ட் கண்டனம்

கருத்துச் சுதந்திரம், மதச்சார்பின்மை மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், "கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது, மாறுபட்ட கருத்துக்களை சகித்துக் கொள்ள முடியாத அமைப்பினர் சிலர் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர்களை படுகொலை செய்கிறார்கள்.

இதை எதிர்த்து நாடு முழுவதும் எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இத்தகைய தாக்குதல்களை ஜனநாயக அமைப்புகள் கண்டித்துள்ளன.

ஆனால் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க, செழுமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா "தைரியம் இருந்தால் எழுத்தாளர்கள் எழுதுவதை நிறுத்தட்டும்" என ஆணவத்தோடு அறிக்கை விடுத்துள்ளார்.

மத்திய பாஜக அமைச்சரின் இந்த மிரட்டல் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகிய சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் படுகொலைகள் பற்றிய புலனாய்வில் இக்கொலைகளில் இந்துத்துவா அமைப்புகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பது வெளிப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற பொய்யை வதந்தியாக்கி ஒரு இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்.

மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

பல மதங்களைச் சார்ந்த, பல இனங்களைக் கொண்ட, பல மொழி பேசக் கூடிய பன்முகத் தன்மை கொண்ட இந்திய தேசத்தில் இந்துத்துவா என்ற ஒற்றை அடையாளத்தை திணித்து இந்தியாவை இந்துத்துவா நாடாக ஆக்கிடும் நோக்கோடு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் பன்மைத்துவ பண்பாட்டின் மீது கொடூரமான தாக்குதலை தொடுத்துள்ளன.

மத்தியில் கிடைத்துள்ள ஆட்சியதிகாரத்தையும் சங்பரிவார் அமைப்புக்கள் தங்களுடைய நோக்கத்திற்கு பயன்படுத்துகின்றன.

இத்தகைய பின்னணியில் சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழக படைப்பாளிகள், கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதை கண்டிப்பதோடு, இந்திய நாட்டின் அடிப்படை மாண்புகளான ஜனநாயகம், மதச்சார்பின்மை, கருத்துச் சுதந்திரத்தை பாதுகாத்திட ஒன்றுபட்டு குரல் எழுப்பியிருப்பது பாராட்டத்தக்கது, வரவேற்கத்தக்கது.

மதச்சார்பின்மை மீதும், கருத்துச் சுதந்திரத்தின் மீதும் இந்துத்துவா சங்பரிவார் அமைப்புகள் தொடுத்துள்ள தாக்குதலை கண்டித்து குரல் எழுப்புமாறு அனைத்து பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x