

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமிபேசியதாவது:
தமிழகத்தை பொருத்தவரை தேசியக் கட்சிகள் ஒருபொருட்டேஅல்ல. அவை அதிமுக அல்லதுதிமுகவின் தோளில்தான் ஏறிபயணிக்கின்றன. வரும் தேர்தலிலும் அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான் நேரடி மோதல். வீர விளையாட்டு களத்தில் அடிபட்டுவிடும் என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் அவர்கள். எனவே, நமக்கு ஒரே எதிரி திமுகதான்.
இத்தேர்தலில் களப் போராட்டம் ஒரு பகுதியாக இருந்தாலும், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வீட்டில் இருக்கும் பெண்களைக்கூட மாற்றும் சக்தி பெற்றுள்ளன. எனவே, அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயல்பாட்டை இன்னும் வேகப்படுத்த வேண்டும்.
சசிகலா வந்தால் கட்சி 4 ஆக உடையும் என்கிறார்கள். ஸ்லீப்பர் செல் இருப்பதாக கூறுகின்றனர். அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.ஒருங்கிணைப்பாளரும், இணைஒருங்கிணைப்பாளரும் ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாகநடத்திச் செல்கின்றனர். சசிகலாவெளியில் வந்தாலும் ஒன்றும்ஆகப்போவதில்லை. யாரும்அங்கு செல்லப்போவதில்லை. நமக்குள் குழப்பம் ஏற்படுத்தபலர் முயற்சிக்கின்றனர். வரும் 3 மாதங்களும் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஒரே முகமாக, ஒரே சிந்தனையில் இருக்க வேண்டும். இடையில் வருவோர் இடையில் போகட்டும்.
முதல்வர் பழனிசாமி 2-வது முறையாக 2021-ம் ஆண்டிலும் முதல்வர் பொறுப்பேற்பார். ஓபிஎஸ் ராஜகுருவாக நின்று அவரை ஏற்றி வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிர்வாகிகள் ஆலோசனை
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடந்தது. இதில், பூத் கமிட்டிகளை மேலும் வலுப்படுத்தி, கமிட்டிக்கு தலா 9 பேர்கொண்ட 5 குழுக்களை உருவாக்குவது குறித்து மண்டல பொறுப்பாளர்களுககு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர்.