Published : 10 Jan 2021 03:28 AM
Last Updated : 10 Jan 2021 03:28 AM

முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல்: தேர்தல் வெற்றிக்கு ஒற்றுமையுடன் உழைக்க தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதை ஏற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. மன மாச்சரியங்களை மறந்து அதிமுகவின் வெற்றிக்காக அனைவரும் உழைக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள வாரு வெங்கடாசலபதி பேலஸில் நேற்றுகாலை 11.15 மணிக்கு அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணைஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப் பாளர்கள், அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, துணை முதல்வர் ஓபிஎஸ் 11.10 மணிக்கும், முதல்வர் பழனிசாமி 11.15 மணிக்கும் வந்தனர். கூட்டத்தில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை அறிவித்ததை ஏற்றும், சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வெற்றி வியூகம் அமைத்தல், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய ஓபிஎஸ் மற்றும் முதல்வர் பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்குதல், அதிமுகவில் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு ஒப்புதல்,அதிகாரம் அளித்தல் உட்பட 17தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

பின்னர் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

அதிமுகவின் 40 ஆண்டுகால வரலாற்றில் எனது வாழ்வு பின்னிப்பிணைந்துள்ளது. கட்சிக் கொடிபிடித்து ஓடிவரும் தொண்டனாக தொடங்கி இன்று ஒருங்கிணைப்பாளராக உங்கள் முன்பு நிற்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்ததற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பணிகளுக்கு முன்புநான் ஒரு பொருட்டே அல்ல. நான்எந்தச் சூழலிலும், சுயநலத்துக்காகவும் கழகத்தை விட்டு விலகாதவன். உண்மை விசுவாசி என்பதை தவிர வேறு தகுதிகள் இல்லை.

இதுவரை எவ்வாறு கடமையாற்றினேனோ, அதைவிட சிறப்பாக இனி வருங்காலத்திலும் தமிழகத்துக்கும், கட்சிக்கும் தொண்டாற்றுவேன். இனி கட்சி தொண்டர்களுக்கு பொற்காலம் தான். கட்சி தொண்டர்களுக்கு இதுநாள் வரை செய்ய முடியாத கடமைகள் அனைத்தையும் அடுத்த ஆட்சியில் நிச்சயம் நிறைவேற்றுவேன். கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் செயல்பட்டால் நாம் வெற்றியை அடைய முடியும். தந்திரம், சூழ்ச்சி, மறைந்திருந்து தாக்கும் கோழை செயல்களால் மாச்சர்யங்களை உருவாக்கி எங்களை வீழ்த்திவிட முடியாது.

ஏற்கெனவே அதிமுக வலிமையாக உள்ளது. இது விஞ்ஞான, நவீன, விழிப்புணர்வுள்ள தமிழகம்,எனவே, தமிழக மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள் என்பதால் அவர்கள் வாக்குகளை பெறுவதுஅவ்வளவு எளிதல்ல. நாடாளுமன்ற தேர்தலில் சற்று தொய்விருந்தாலும், சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகதான் ஆள வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உருவாக்கி வரும் சிறப்பான ஆலயத்தை ஒரு மாதத்தில் திறக்க உள்ளோம். அதை திறக்கும்போது அதிமுகவினர் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும். உழைப்பு, ஒற்றுமைஇருந்தால் வெற்றி நிச்சயம். நமக்குள் உள்ள மனமாச்சர்யங்களை மனதில் இருந்து அகற்றி எறிந்து,ஜெயலலிதாவின் லட்சிய வார்த்தைக்கேற்ப அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு உழைத்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: சுதந்திரத்துக்குப்பிறகு 30 ஆண்டுகள் ஆட்சி செய்யும் ஒரே கட்சி அதிமுகதான். நம்மை யாராலும் அசைக்க முடியாது. இங்கு சாதாரண தொண்டர்கள் தான் நிறைந்துள்ளோம். தமிழக மக்களின் ஆதரவு நமக்கு உள்ளது. எங்கு சென்றாலும் அரசு நன்றாக நடைபெறுகிறது, ஒற்றுமையாக செயல்படுகிறது என்ற நல்ல பெயர் பொதுமக்களிடம் உள்ளது.

இந்த நேரத்தில் மக்களின் மகத்தான ஆதரவை சிந்தாமல் சிதறாமல் இரட்டை இலையை நோக்கி கொண்டுவந்து சேர்ப்பதுதான் ஒரே சிந்தனையாக இருக்க வேண்டும். அதிமுகவில் வேஷ்டி கட்டும்ஆண்கள் உண்டு. கோஷ்டி சேர்க்கும் ஆட்கள் கிடையாது. நீங்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்து கட்சிக்காக உழையுங்கள். மனமாச்சரியங்களை களைந்து, வேறுபாடுகளை புறந்தள்ளி அனைவரும் ஒற்றுமையுடன் கட்சியின் வெற்றி ஒன்றையே கண்முன் நிறுத்தி கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.

கூட்டத்தில் இ.மதுசூதனன் தலைமையுரை ஆற்றினார். முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்புரையும், அமைச்சர் டி.ஜெயக்குமார் நன்றியுரையும் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x