Published : 12 Oct 2015 01:05 PM
Last Updated : 12 Oct 2015 01:05 PM

துறைமுகங்களைத் தனியார் மயமாக்கிட முயற்சிப்பதா?- கருணாநிதி கண்டனம்

துறைமுகங்களைத் தனியார் மயமாக்க வழி வகுக்கும் மத்திய அரசின் முடிவுக்கு திமுக சார்பில் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "கடந்த 3-10-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், சென்னை துறைமுகம் பற்றியும், மதுரவாயல் - துறைமுகம் உயர் மட்ட நெடுஞ்சாலைத் திட்டம் ஏன் கிடப்பிலே போடப்பட்டுள்ளது என்பது பற்றியும் விரிவாகத் தெரிவித் திருந்தேன். சென்னைத் துறைமுகத்தில் வழக்கமாகச் சரக்குகள் கையாளப்படும் திறன், மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தை முடக்கி வைத்திருப்பதன் காரணமாக குறைந்து வருவதாக குறிப்பிட்டிருந்தேன்.

அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணாபட்டணம் தனியார் துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் திறன் வேகமாக அதிகரித்து வருவதாகவும், பறக்கும் சாலைத் திட்டத்தை முடக்கியதைப் போலவே சென்னைத் துறைமுகத்தையும் செயலிழக்கச் செய்து, கிருஷ்ணாபட்டணம் தனியார் துறைமுகத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளின் முன்னோட்டம் தான் மதுரவாயல் திட்டம் முடக்கப்பட்டதற்கான அடிப்படை என்று ஒரு ஆங்கில நாளேட்டில் வந்த செய்தியையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.

மேலும் எனது அறிக்கையில், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சியைத் திட்டமிட்டுத் தடுத்ததற்குக் காரணம்.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப் பள்ளித் துறைமுகம் ஆகியவற்றை வளர்த்து அதன் மூலம் தனியார் சிலருக்கு உதவுவதற்காகத் தானா என்றும் கேட்டதோடு, பொதுத் துறை நிறுவனங்களை வீழ்த்துவது பற்றிய மர்மங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிச்சத்திற்கு வரத்தான் போகின்றன என்றும் தெரிவித்திருந்தேன்.

எனது அறிக்கையிலுள்ள தகவலை நிரூபித்திட உதவுவதைப் போல, நேற்று வந்துள்ள செய்தியில், துறைமுகங்களைத் தனியார் மயமாக்கும் ஒரு முயற்சியாக நாட்டின் 12 முக்கிய துறைமுகங்களை அறக்கட்டளைச் சட்டத்திலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முடிவு மறைமுகமாகத் தனியார் மயத்துக்கான நடவடிக்கையின் துவக்கம் என்று தொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். சென்னைத் துறைமுகம் உட்பட முக்கிய துறைமுகங்கள் எல்லாம் தற்போது துறைமுகங்கள் பொறுப்பு (அறக்கட்டளை) நிறுவனச் சட்டம் - 1963ன் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.

சென்னை உட்பட 12 துறைமுகங்களையும் தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் தனியார் மய முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதுமுள்ள துறைமுக தொழிற்சங்கங்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடந்தது. இந்த நிலையில் தனியார் மயத்தை தந்திரமாக நுழைக்கும் வகையில் டிரஸ்ட் கீழ் செயல்படும் துறைமுகங்களை வேறு ஒரு சட்டத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு இப்போது முடிவு செய்துள்ளது. அதாவது "முக்கிய துறைமுகங்கள் பொறுப்பு நிறுவனச் சட்டம் - 1963"க்குப் பதிலாக, "முக்கிய துறைமுகங்கள் அத்தாரிட்டி சட்டம்" என மாற்றப்படவுள்ளது.

அப்படிச் செய்தால், இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்கள் அனைத்தும் நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். அதன் பிறகு துறைமுகங்களைப் படிப்படியாகத் தனியாரிடம் ஒப்படைப்பது எளிதாக நடக்கும். இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் சார்பில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிலே உள்ளவர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலே ஈடுபட்டு வருகிறார்கள்.

நமது ஜனநாயக - சோஷலிசக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்திட முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாவிட்டாலும், பலவீனப்படுத்திடும் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தாமலாவது இருப்பது நல்லது. எனவே, துறைமுகங்களைத் தனியார் மயமாக்க வழி வகுக்கும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x