Published : 10 Jan 2021 03:28 AM
Last Updated : 10 Jan 2021 03:28 AM

புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் இருந்து உடைந்து விழும் கான்கிரீட் துண்டுகள்: தாராபுரம் பொதுமக்கள் அச்சம்

தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே பல கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டு திறப்புவிழா செய்யப்படாத மேம்பாலத் தின் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் இருந்து கான்கிரீட் துண்டுகள் உடைந்து தரையில் விழுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: தாராபுரம் நகராட்சி மத்திய பேருந்து நிலையம் எதிரே சாலை விரிவாக்கப் பணியின்போது அனுப்பர்பாளையம் முதல் ஒட்டன்சத்திரம் வரை புதிய நான்கு வழி சாலை அமைக்கப்பட்டது. தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே சுமார் 300 மீட்டர் தூரம் புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களே ஆன நிலையில் இப் பாலத்தின் மையப்பகுதி மற்றும் பக்கவாட்டு சுவர்களில் இருந்து அடிக்கடி கான்கிரீட் துண்டுகள் பெயர்ந்து விழுகின்றன. அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டுநர்களின் உயிருக்கும், உடமைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

நேற்று காலை பேருந்து நிலையத்தில் உள்ளே நுழையும் முகப்புப் பகுதி அருகே மேம்பாலத்தில் கான்கிரீட் துண்டுகள் கீழே விழுந்தன. பாலத்தின் மேல் பகுதியில் கனரக வாகனங்கள் செல்லும்போது அதிர்வுகள் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x