Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM

சென்னை மண்ணடியில் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவரின் கட்டிடங்கள் ‘சீல்’ வைப்பு: மத்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை

சென்னை மண்ணடி மூர் தெருவில், பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவருக்கு சொந்தமான 2 பழமையான கட்டிடங்களை மத்திய அரசு அதிகாரிகள் முன்னிலையில் வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவில் இருந்து பலர் பாகிஸ்தான் சென்றனர். ஆனால், அவர்களின் நிலம் உள்ளிட்ட சொத்துகள் இந்தியாவில் இருந்தன. அவ்வாறு சென்றவர்களின் நிலத்தை நிர்வகிக்க ‘கஸ்டோடியன் எனிமிபுரோபர்டி ஆஃப் இந்தியா’ (Custodian Enemy property ofindia) என்ற துறை உருவாக்கப்பட்டது.

மும்பையில் இதன் தலைமைஅலுவலகம் உள்ளது. பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு சென்றவர்களின் சொத்துகள், எதிரி சொத்துகளாக அறிவிக்கப்பட்டு, அதற்கான சட்டத்தின்படி நாடு முழுவதும் 9,406 அசையா சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டன.

இதில், சென்னை மண்ணடி மூர் தெருவில் 2 பழமையான கட்டிடங்கள் பாகிஸ்தானுக்கு சென்ற நபருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, ‘கஸ்டோடியன் எனிமி புரோபர்டி ஆஃப் இந்தியா’ துறை அதிகாரி பேட்ரியா தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள் நேற்று மூர் தெருவுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

பொருட்கள் அகற்றம்

பின்னர் அந்த 2 கட்டிடங்களை கண்டறிந்து அவற்றைப் பூட்டி ‘சீல்’ வைத்தனர். முன்னதாக அந்த பாழடைந்த கட்டிடத்தை பயன்படுத்தி வந்தவரின் பொருட்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.

எதிரி சொத்தை அனுபவித்து வரும் தற்போதைய நபர்களே அதை அரசிடம் விலைக்கு வாங்கிக் கொள்ள, மத்திய உள்துறை அமைச்சகம் முன்னுரிமை அளிக்கும் என்றும், அவர்கள் வாங்காவிட்டால் ஏலத்தில் விடுவது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் உள்ளதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகம் உள்ள இடமும் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு சென்ற நபரின் சொத்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x