கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கில் அரசு தளர்வுகளை வழங்கினாலும் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்: பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கில் அரசு தளர்வுகளை வழங்கினாலும் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்: பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
Updated on
2 min read

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. தற்போது தினமும் புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவது 800-க்கும்கீழ் குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கியுள்ளது.

வணிக நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதித்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள், வணிகர்கள், பணியாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, கைகளை தூய்மை செய்துகொள்வது கட்டாயம் என அறிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து வந்த தீபாவளி பண்டிகையின்போது தியாகராய நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட துணிக் கடைகள் மற்றும் தெருக்களில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. கடைகளுக்குள் சென்ற வாடிக்கையாளர்கள், பொருட்களை தேர்வு செய்தல், அதற்கு பணம் செலுத்துதல் என சில மணி நேரங்களை கடைகளுக்குள் செலவிட்டனர்.

உணவகங்கள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அரசு அனுமதித்து இருந்தது. சென்னை போன்ற மாநகரங்களில் நெருக்கடியான இடங்களில் செயல்பட்டு வரும் உணவகங்கள் பலவற்றில், உணவருந்த அமரும் இருக்கைகள் நெருக்கமாகவே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் போதிய இடைவெளி இன்றி அனைவரும் உணவருந்தி வருகின்றனர். உணவருந்தும்போது, முகக்கவசத்தையும் அணிந்திருக்க முடியாது. கள நிலவரம் இவ்வாறு இருந்தும் தமிழகத்தில் தொற்று அதிகரிக்கவில்லை.

அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அரசு அனுமதித்து இருந்தது. அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. கள நிலவரமும், மத்திய அரசின் அறிவுறுத்தலும் முரணாக இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக மருத்துவ வல்லுநர்களிடம் கேட்டபோது, அண்மைக் காலமாக முதியவர்கள் வெளியில் வருவது குறைந்துள்ளது. தீபாவளி நேரத்தில் வெளியில் வந்தவர்களில் பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்கும். அவர்கள் ஆரோக்கியமான உடலைக் கொண்டு இருப்பதால், அவர்களை கரோனாவால் ஒன்றும் செய்ய முடியாமல் அழிந்திருக்கும். அதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கும். மந்தை நோய் எதிர்ப்பு சக்தியையும் (Herd Immunity) பெற்றிருப்பார்கள். அதன் காரணமாகவே தொற்று அதிகரிக்கவில்லை" என்றனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கல்லூரிகளை திறந்தபோதும், உணவகங்களை திறந்தபோதும் தொற்று பரவியது. அத்தகைய சவால்களை எதிர்கொண்டு அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக பிரிட்டன் அரசு தெரிவித்தது. தற்போது அங்கு மீண்டும் தொற்று அதிகரித்து, ஊரடங்கு அமலாகியுள்ளது.

மக்களின் வாழ்வாதாரம், மாநில பொருளாதாரம் கருதி அரசு தளர்வுகளை வழங்குகிறது. அவசியத் தேவை உள்ளவர்கள் அந்த தளர்வுகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தளர்வு வழங்கினாலும், பொதுவெளியில் கரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்றி பாதுகாப்பாக செயல்பட வேண்டும். அந்த பொறுப்புணர்வு மக்களுக்கு வர வேண்டும். உணவகங்களுக்கு சென்றாலும், அருகருகில் அமர்ந்து உண்பதை தவிர்த்து, பார்சல் வாங்கிச் சென்று கூட திறந்த வெளியில் சாப்பிடலாம். தளர்வை அலட்சியமாக மக்கள் அனுபவித்தால் பிரிட்டனில் ஏற்பட்ட நிலை தமிழகத்தில் ஏற்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in