

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நாராயணசாமி போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அவரை முதல்வராக தேர்வு செய்தனர். அவர் 6 மாதங்களில் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்தொகுதியில் நாராயணசாமி போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வராக தொடர்கிறார்.
இதையடுத்து சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதியில் போட்டியிட ஜான்குமாருக்கு காங்கிரஸ் வாய்ப்பளித்தது. இதில் அவர் வெற்றிபெற்று எம்எல்ஏவாக உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஜான்குமார் அதிருப்தியில் இருந்த நிலையில், அவர் கடந்த மாதம் புதுவை மாநில பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை சந்தித்து பேசினார். இதனால் அவர் கட்சி மாறப்போவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து ஜான்குமார் வகித்த பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜான்குமார் தனது வீட்டில் ஆத ரவாளர்கள் கூட்டத்தில் மகன் ரிச்சர்டை அறிமுகம் செய்து பேசியுள்ள வீடியோ நேற்று வெளியானது.
அதில் அவர் பேசியதாவது:
கடந்த தேர்தலில் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெற்றிபெற நான் காரணமாக இருந்தேன். 3 பேருக்கு உதவி செய்தேன். இதனால் எனக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் விசுவாசமாக இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் சொந்த தொகுதியான நெல்லித்தோப்பு மற்றும் காமராஜர் நகர் தொகுதியில் வெற்றிபெற வேண்டியுள்ளது. நெல்லித்தோப்பு தொகுதியில் எனது மகன் ரிச்சர்ட் தேர்தலில் போட்டியிடுவார். நானும் அவருடன் இணைந்து தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது.
இதனிடையே துணைநிலை ஆளுநரை கண்டித்து நாராயணசாமி தலைமையில் நடைபெறும் காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் அவர் பங்கேற்று வருகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முதல்வர் நாராய ணசாமி தலைமையில் காங்கிரஸ் சந்திக்க உள்ள நிலையில் அவர் நெல்லித்தோப்பில் இம்முறை போட்டியிடவில்லை என்றால் எந்த தொகுதியில் போட்டியிடுவார்? என்ற விவாதம் எழுந்துள்ளது.