

மதுரையில் புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு மொபைல்போனில் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அதற்கான ஒதுக்கீடு வரவில்லை என்று ரேஷன் கடைக்காரர்கள் கூறுவதால் புதிய அட்டைதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, சீனி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக ரேஷன் கடைகளில் கடந்த 4-ம் தேதி முதல் நாளொன்றுக்கு 200 பேர் வீதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக அரிசி அட்டைதாரர்களுக்கு முன்கூ ட்டியே அவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க வேண்டிய நாள், நேரத்தை குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் பொருட்களை வாங்காதவர் களுக்கு ஜன.13-ல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 8.86 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவர்களுக்கு தற்போது பொருட்கள் வழங்கப் படுகின்றன. இந்நிலையில், புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்திருந்த 4,000 பேருக்கு, அவர்களது அட்டை தயாராக இருப்பதாகவும், ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் மொபைல்போனில் குறுந்தகவல் வந்துள்ளது.
உடனடியாக சம்பந்தப்பட்ட புதிய குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குமாறு கேட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான ஒதுக்கீடு இன்னும் வரவில்லை என்று பணியாளர்கள் கூறுகின்றனர். இதை ஏற்க மறுக்கும் புதிய அட்டைதாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ரேஷன் கடை பணியாளர்கள் திணறி வருகின்றனர்.
அதேபோல், தற்போது 60 சதவீத கார்டுகளுக்கு மட்டுமே இலவச வேட்டி, சேலை வழங்கப் பட்டுள்ளது. அதுவும் முதல் நாள் வந்தவர்களுக்கு வேட்டி, சேலையும், இரண்டாவது நாள் வந்தவர்களுக்கு ஏதாவது ஒன்றை மட்டுமே வழங்கியுள்ளனர். 40 சதவீத குடும்ப அட்டை தாரர்களுக்கு வேட்டி, சேலை கிடைக்கவில்லை. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மதுரை வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி கூறுகையில், பழைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத் தொகு ப்பு ஒதுக்கப்பட்டு தற்போது வழங்கப்படுகிறது. புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை இனிமேல்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார்.