

புதுச்சேரியில் இருந்து ஆளுநர் கிரண்பேடியை உடனே மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து நடைபெறும் போராட்டக் களத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வந்தார்.
இக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ''பாஜக கட்சியில் டெல்லியில் முதல்வர் வேட்பாளராகக் கிரண்பேடி போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அரசியலமைப்புச் சட்டப்படி புதுச்சேரி மக்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட, ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு மாறாகக் கிரண்பேடி செயல்படுகிறார்.
குளிரில் போராடும் விவசாயிகள் மீது இரக்கமற்ற முறையில் மத்திய அரசு செயல்படுகிறது. அதேபோல் குளிரில் புதுச்சேரியில் முதல்வர் உள்ளிட்டோர் போராட்டக் களத்தில் படுத்து உறங்குகின்றனர்.
புதுச்சேரி மக்களுக்கு எதிராகத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார். மக்களால் தேர்வான அரசுக்கு எதிராகச் செயல்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையால், ஆளுநர் மாளிகைக்குள் புகுந்து செல்லவில்லை.
அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மத்திய அரசுக்கு நம்பிக்கை இருந்தால் இப்பிரச்சினையில் உடனே தலையிட்டு கிரண்பேடியை உடனே புதுச்சேரியிலிருந்து மாற்ற வேண்டும்’’ என்று முத்தரசன் குறிப்பிட்டார்.