Last Updated : 09 Jan, 2021 05:14 PM

 

Published : 09 Jan 2021 05:14 PM
Last Updated : 09 Jan 2021 05:14 PM

கிடப்பில் கோப்புகள்: கிரண்பேடியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ள புதுச்சேரி அமைச்சர்

அமைச்சர் கந்தசாமி.

புதுச்சேரி

துணை ராணுவப் படையைப் புதுச்சேரியிலிருந்து திரும்பப் பெறச் செய்யுமாறு டிஜிபியிடம் அமைச்சர் கந்தசாமி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் கிடப்பில் கோப்புகள் உள்ளதால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கிரண்பேடியைக் கண்டித்தும், அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆளுநர் மாளிகை முன்பு தொடர் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. ஆளுநர் மாளிகைக்குப் பாதுகாப்பு அளிக்க புதுவை காவல்துறை சார்பில் துணை ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. துணை ராணுவத்தைச் சேர்ந்த 350 வீரர்கள் புதுவைக்கு வந்துள்ளனர். புதுச்சேரி முழுக்க பாதுகாப்புப் பணியில் நவீன ஆயுதங்களுடன் துணை ராணுவப் படையினர் நிற்பதை மக்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து, "நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் புதுவை அரசு தனி ஒருவரின் பாதுகாப்புக்காகப் பல கோடி நிதியை துணை ராணுவப் படைக்காக வீண் விரயம் செய்யாமல் துணை ராணுவத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகள் கூட்டாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இந்நிலையில், 2-வது நாளாகத் தொடர்ந்து போராட்டம் இன்று (ஜன.09) நடைபெறுகிறது. இதனிடையே, புதுவை அமைச்சர் கந்தசாமி தனது அலுவலகத்திற்கு காவல்துறை டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சா, ஏடிஜிபி ஆனந்தமோகன் ஆகியோரை அழைத்துப் பேசினார். அப்போது, துணை ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என, அமைச்சர் கந்தசாமி வலியுறுத்தினார். இதுகுறித்து, ஆலோசனை நடத்தி முடிவெடுப்பதாக டிஜிபி தெரிவித்துப் புறப்பட்டார்.

இதுபற்றி, அமைச்சர் கந்தசாமி கூறுகையில், "டிஜிபியை அழைத்துப் பேசினேன். காங்கிரஸ் கூட்டணிப் போராட்டம் அறவழியில்தான் நடைபெறும் என்று தெரிவித்தேன். புதுச்சேரியில் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், தங்கள் வீடுகளுக்கே பல பகுதிகளில் செல்ல மக்கள் சிரமத்தில் உள்ளனர். எனவே, துணை ராணுவப் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள டிஜிபியிடம் தெரிவித்துள்ளேன்.

ஆளுநர் கிரண்பேடியைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டுள்ளேன். கிடப்பில் கிடக்கும் கோப்புகளுக்கு அனுமதி தரக்கோரி வலியுறுத்த உள்ளேன். அவர் நேரம் ஒதுக்கினால் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநர் கிரண்பேடியைச் சந்திப்பேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x