

கூட்டணியில் அதிமுக தலைமையை பாஜக ஏற்கும் என, பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் நடிகருமான ராதாரவி நம்பிக்கை தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் உதகை தேவாங்கர் திருமண மண்டபத்தில் 'நம்ம ஊரு பொங்கல் விழா' இன்று (ஜன. 09) நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். மண்டப வளாகத்தில் பாஜகவினர் பானையில் பொங்கலிட்டு, பொங்கலை கொண்டாடினர். இதில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் நடிகருமான ராதாரவி கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
"ஸ்டாலின் முழுமையான தேர்தலை முதல் முறையாக சந்திக்கிறார். அதனால் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். தேர்தல் காலங்களில் இத்தகைய கூட்டங்கள் நடத்துவது சகஜம். அது தான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தேர்தலின் போது தான் தலைவர்கள் மக்களை சந்திப்பது என்பது தமிழகத்தின் தலையெழுத்து. ஸ்டாலின் பேசுவது அவரது தந்தை கருணாநிதி போல் இல்லை.
பாஜக நல்ல கட்சி என்பதாலும், இந்த கட்சியில் எவ்வித பிரச்சினைகள் இல்லாததாலும் நடிகர்கள் பாஜக நோக்கி வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இருக்குமா இல்லையா என்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும். தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி இருக்கும்.
இரட்டை இலை சின்னத்தை அழிக்க இன்னும் 50 ஆண்டு காலம் ஆகும். ஆனால், அதற்கு தலைமை நன்றாக இருக்க வேண்டும். பாஜகவுக்கு சிறந்த தலைமை மோடி. பாஜக தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என பேசப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக தலைமையை பாஜக ஏற்றுக்கொள்ளும். அவர்கள் அரசியல் அறிந்தவர்கள்.
அதிமுக தமிழகத்தில் திமுகவை இடமில்லாமல் ஆக்கியது. ஜெயலலிதா கருணாநிதியையே வெற்றிகொண்டார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பாஜகவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை".
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.