

சின்னசேலம் அருகே இன்று அதிகாலை சாலையோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (45). இவர் தனது மகள் யஷ்வந்தினியை சென்னையில் மருத்துவக் கல்வி கவுன்சிலிங்குக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து நாமக்கல்லில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக காரில் தனது மனைவி பிரியா (43), மகன் அபிஷேக் (15) மற்றும் மகள் யஷ்வந்தினி (18) ஆகியோருடன், கள்ளக்குறிச்சி மாவட்டம் வழியாக நாமக்கல் நோக்கிச் சென்றார். கார் இன்று (ஜன.09) அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே விருத்தாசலம்-சேலம் சாலையில் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பிரியா, அபிஷேக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சவுந்தரராஜன், மகள் யஷ்வந்தினி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த கீழ்குப்பம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சவுந்தரராஜனையும், யஷ்வந்தினியையும் மீட்டுக் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதித்தினர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தரராஜன் உயிரிழந்தார். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.
யஷ்வந்தினிக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து கீழ்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.