

சசிகலா குறித்து இழிவாகப் பேசியதாக, விழுப்புரம் அருகே உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதயநிதியின் உருவ பொம்மையைத் தீயிட்டுக் கொளுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று 2-வது நாளாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சசிகலா குறித்துத் தொடர்ந்து இழிவாகப் பேசி வருவதாக, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இது தொடர்பான புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சசிகலா குறித்து இழிவாகப் பேசியதாக, விழுப்புரம் அருகே உள்ள பெரிய செவலை கூட்ரோட்டில், உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து இன்று (ஜன.09) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரிய செவலை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குமார் தலைமையில் அமமுகவினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உதயநிதி ஸ்டாலினின் உருவ பொம்மையைத் தீயிட்டுக் கொளுத்தி தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இனிவரும் காலங்களில் பெண்கள் குறித்து இழிவாகப் பேசினால் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகக் கடுமையான போராட்டங்களில் ஈடுபடவும் தயாராக உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.