முதல்வர் வேட்பாளராக பழனிசாமி ஏற்பு; கூட்டணி குறித்து முடிவெடுக்க ஓபிஎஸ்-ஈபிஎஸ்ஸுக்கு அதிகாரம்: அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

முதல்வர் வேட்பாளராக பழனிசாமி ஏற்பு; கூட்டணி குறித்து முடிவெடுக்க ஓபிஎஸ்-ஈபிஎஸ்ஸுக்கு அதிகாரம்: அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
Updated on
1 min read

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுக்குழு ஒப்புதல் அளித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில், சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று (ஜன.09) காலை 8.50 மணிக்குத் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் 4,000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு, செயற்குழுவிற்கு வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்குத் தொடங்குவதாக இருந்த பொதுக்குழு 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

காலை முதலே பொதுக்குழு நடக்கும் வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தின் முன் அதிமுகவினர் திரண்டிருந்தனர். கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் காலை முதலே தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அழைப்பிதழைக் காண்பித்தவுடன் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை முடித்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் முதலில் முதல்வர் எடப்பாடியும், உடன் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அரங்கிற்கு வந்தனர். கூட்ட மேடையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுடன் முன்னணித் தலைவர்கள் அமர்ந்திருந்தனர்.

ப.வளர்மதி வரவேற்புரையாற்றினார். இரங்கல் தீர்மானத்தை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வாசித்தார். முதலில் ஒவ்வொரு தீர்மானமாக அவரவர் வாசிக்க நிறைவேற்றப்படும். பின்னர் தலைவர்கள் பேசிய பின்னர் கூட்டம் நிறைவுறும்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று அதிமுக தலைமையில் தேர்தல் வியூகம், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவருக்கும் அதிகாரமளிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் பழனிசாமியைத் தொடர்ந்து விமர்சித்து வரும் ஸ்டாலினுக்குக் கண்டனம், ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் தீர்மானம், உலக முதலீட்டார் மாநாடு நடத்தி முதலீடுகளை ஈர்த்தது, 2000 அம்மா மினி கிளினிக், நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தில் தமிழகத்தை இணைத்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in