Published : 09 Jan 2021 10:58 AM
Last Updated : 09 Jan 2021 10:58 AM

கிரண்பேடியைத் திரும்பப் பெற வலியுறுத்தல்; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இரவு முழுவதும் சாலையில் உண்டு உறங்கி போராட்டம்

இரவு நேரத்தில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் படுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தத் தடையாக உள்ள கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி முதல்வர் நாராயணசாமி இரவு முழுவதும் சாலையில் உண்டு உறங்கி போராட்டம் நடத்தினார்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாகவும், அவரை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரியும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தாத முதல்வர் நாராயணசாமி இல்லத்தை முற்றுகையிடப் போவதாக பாஜக அறிவித்திருந்தது.

இதனிடையே, கரோனா பரவல் காரணமாக 144 தடைச் சட்டம் அமலில் உள்ளதால், ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமைச் செயலகம், முதல்வர் இல்லம் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்தத் தடை விதித்தது புதுச்சேரி காவல்துறை.

மீறிப் போராட்டம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், போராட்டம் காரணமாகக் கலவரம் ஏற்படாமல் இருக்க 400க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகை அருகே போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று (ஜன. 08) காலை காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி அமைதியான முறையில் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

துணைநிலை ஆளுநரைத் திரும்பப் பெறும் வரை 4 நாட்களுக்கு தர்ணா போராட்டம் நடைபெறும் என அறிவித்ததைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் போராட்டம் நடந்த சாலையிலேயே உணவு உண்டு, அங்கேயே படுக்கை அமைத்து உறங்கினார்கள். போராட்டக் களத்தைச் சுற்றி துணை ராணுவப் படையினர் மற்றும் போலீஸார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே 2-வது நாளாக தர்ணா போராட்டம் இன்று (ஜன. 09) தொடர்கிறது. இதில், முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x