Published : 09 Jan 2021 10:01 AM
Last Updated : 09 Jan 2021 10:01 AM

2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கும் அதிமுக செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம்: முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்: கோப்புப் படம்.

சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. இந்நிலையில், இக்கூட்டம் 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்க உள்ளது.

அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில், சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று (ஜன. 09) காலை 8.50 மணிக்குத் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கூட்டம் தொடங்கும் நேரம் காலை 11 மணியாக மாற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து 10.30 மணிக்குப் புறப்படுவதால், 11 மணிக்குக் கூட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்திற்கு, 4,000க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் காலை முதலே தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அழைப்பிதழுடன் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வரத் தொடங்கினர்.

கூட்டம் நடைபெறும் இடத்தில் சட்டப்பேரவை கட்டிட வடிவமைப்பிலான கட்-அவுட்டில், முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் தோரணங்கள், அதிமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் கூடும் இந்தக் கூட்டம், அரசியல் வட்டாரத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில், பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

கட்சிப் பணிகள், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் அதிகாரங்கள், கூட்டணித் தொகுதிப் பங்கீடு, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x