Published : 09 Jan 2021 03:11 AM
Last Updated : 09 Jan 2021 03:11 AM

பாரம்பரிய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பங்கேற்பு; தி மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் கண்காட்சி: சென்னையில் நாளை நடக்கிறது

பாரம்பரியமிக்க கார்களும், பழமையான இருசக்கர வாகனங்களும் பங்கேற்கும் ‘தி சென்னை ஹெரிடேஜ் ஆட்டோ டிஸ்பிளே - 2021’ என்ற அணிவகுப்பு கண்காட்சி சென்னையில் நாளை நடக்கிறது.

‘தி மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்’ கடந்த 19 ஆண்டுகளாக செயல்படுத்தி வரும் இந்த கார் மற்றும் இருசக்கர வாகன அணிவகுப்பில் ஒவ்வோர் ஆண்டும் 50 முதல் 75 வாகனங்கள் இடம்பெறுகின்றன. அந்த வரிசையில் இந்த ஆண்டும் பல்வேறு வகையான வாகனங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளன.

இதுகுறித்து, மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் சங்கத்தின் செயலாளர்எம்.எஸ்.குகன் கூறியதாவது :

புராதன வாகனங்களை பாதுகாப்பதும், புதுப்பிப்பதும் அவற்றை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வருவதும் எங்கள் சங்கத்தின் முக்கிய இலக்கு. எங்களது உறுப்பினர்கள் இதில் சீரிய பங்களிப்புடன் கலந்துகொள்கின்றனர். ‘தி மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப்’, நாளை (ஞாயிறு) சென்னை ராதா கிருஷ்ணன் சாலையிலுள்ள ஏவி.எம் இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் அமைந்துள்ள கார் நிறுத்தத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடத்தும் கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட பாரம்பரியமிக்க கார்களும், 25-க்கும் மேற்பட்ட பழமையான இருசக்கர வாகனங்களும் கலந்து கொள்கின்றன.

1886-ம் ஆண்டு உலகில் முதன் முதலாக பென்ஸால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனமும், 1896-ம் ஆண்டு போர்டு தயாரித்த மோட்டார் வாகனமும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. கோயம்புத்தூர் யு.எம்.எஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் உருவாக்கிய இந்த இரு வாகனங்களையும் இந்நிகழ்ச்சியின் சிறப்பாக கருதுகிறோம்.

கடந்த ஆண்டு ஜனவரி 18 மற்றும் 19-ம் தேதிகளில் ‘தி சென்னை - பாண்டி ஹெரிடேஜ்’ என்ற பெயரில் இந்நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வோர் ஆண்டும் பல நிகழ்ச்சிகளை நடத்திவரும் எங்கள் சங்கத்தால் கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா தொற்றால் இந்நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை.

மீண்டும் புத்துயிர்ப்போடு இப்போதுநிகழ்ச்சியை சென்னையில் நடத்துகிறோம். சென்னையில் நாளை நடக்கவுள்ள நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக செயலாக்கப் பிரிவு (ஆஃபரேஷன்) கூடுதல் டிஜிபி எ.கே.விஸ்வநாதன் கலந்துகொள்கிறார்.

இவ்வாறு எம்.எஸ்.குகன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x