

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி அவரது தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோட்டில் டிஎஸ்பி-யாக இருந்தவர் விஷ்ணுபிரியா. இவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததால்தான் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது தோழி கூறியுள்ளார். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. விஷ்ணுபிரியா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தர விட வேண்டும் என அரசியல் கட்சி யினரும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, தனது மகள் மரணத்தில் சந் தேகம் இருப்பதாகவும், காவல் துறை உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே தனது மகள் இறந்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தர விடக் கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.