அரசுப் பணி வழங்க வலியுறுத்தி சேலத்தில் முதல்வர் வீடு அருகே திரண்ட பகுதிநேர ஆசிரியர்கள்

சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள   முதல்வர் பழனிசாமியின்  இல்லம் முன்பு கோரிக்கை பதாகைகளுடன் காத்திருந்த பகுதிநேர ஆசிரியர்கள்.
சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லம் முன்பு கோரிக்கை பதாகைகளுடன் காத்திருந்த பகுதிநேர ஆசிரியர்கள்.
Updated on
1 min read

காலியாக உள்ள அரசு ஆசிரியர் பணியிடங்களில் தங்களை நியமிக்க வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்வர் பழனிசாமி வீடு அருகே திரண்டனர்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் இருந்து, முதல்வர் பழனிசாமி கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று (8-ம் தேதி ) காலை 9 மணிக்கு முதல்வர் பழனிசாமி வீட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இதனை அறிந்த பகுதி நேர ஆசிரியர்கள் 700-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 7 மணிக்கு முதல்வர் பழனிசாமி வீட்டு முன்பு வந்தனர். காலியாக உள்ள அரசு ஆசிரியர் பணியிடங்களில் தங்களை நியமிக்க கோரி பதாகைகளை கையில் ஏந்தியபடிசாலையின் இரு புறமும் நின்றனர்.

இது தொடர்பாக பட்டதாரி ஆசிரியர்கள் கூறும்போது, ‘கடந்த 2018-19-ம் ஆண்டு 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடந்தது. தேர்ச்சி பெற்றவர்களில், காலிப்பணியிடத்திற்கும் அதிகமான பேரை அழைத்து, சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது. இந்நிலையில் சில பாடங்களுக்கு மட்டும் ஆசிரியர்களை நியமித்து ஆணை வழங்கப்பட்டது. தற்போது, 1,500-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால், தேர்ச்சி பெற்ற எங்களைக் கொண்டு, காலி பணியிடங்களை நிரப்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

முதல்வர் பழனிசாமி வீட்டில் இருந்து நேற்று காலை 9.05 மணிக்கு காரில் புறப்பட்ட போது, சாலையில் திரண்டிருந்த பகுதிநேர ஆசிரியர்கள், கோரிக்கை அட்டையை காட்டினர். அவர்களை பார்த்து கும்பிட்டபடி முதல்வர் பழனிசாமி, காரில் சென்றார். முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கவில்லை என்று சில ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மாநகர காவல் உதவி ஆணையர் நாகராஜன் தலைமையிலான போலீஸார் ஆசிரியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in