

தென்காசி மாவட்டம், புளியங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. பறிக்கப்படும் எலுமிச்சை பழங்கள் தரம் பிரிக்கப்பட்டு பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் அதிக அளவில் இங்கிருந்து எலுமிச்சை பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
கோடைக் காலத்தில் எலுமிச்சைக்கு தேவை அதிகமாக இருப்பதால் நல்ல விலை கிடைக்கும். மழைக் காலத்தில் தேவை அதிகம் இருக்காது என்பதால் விலை வீழ்ச்சியடைவது வாடிக்கையாக உள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் எலுமிச்சை விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ எலுமிச்சை பழம் 30 முதல் 35 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “புளியங்குடி சந்தைக்கு கடந்த சில நாட்களாக எலுமிச்சை வரத்து குறைவாக இருந்தது. தற்போது வரத்து சற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் போதிய அளவில் விற்பனை இல்லை. இதனால் விலை குறைந்துள்ளது. கோடைக் காலத்தில் கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாகும். மழைக் காலம் என்பதால் எலுமிச்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளது” என்றனர்.