

காரைக்குடியில் தரமற்ற பாதாளச் சாக்கடைத் திட்டம் குறித்து முதல்வருக்கு எழுதிய கடிதத்திற்குப் பதில் கிடைக்காததால், தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாகக் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தரமற்ற பாதாளச் சாக்கடைத் திட்டப் பணி நடைபெறுவதாகக் கூறி, அதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று ஐந்து விளக்கு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறும்போது, ''காரைக்குடி பாதாளச் சாக்கடைத் திட்டப் பணி தரமாக இல்லை. இதில் முறைகேடு நடந்துள்ளது. குளறுபடியான திட்டத்தை அமல்படுத்தி பணத்தைச் சூறையாடி உள்ளனர்.
இதுகுறித்துத் தமிழக முதல்வருக்கு நான் எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலையும் தரவில்லை. இதனால் விரைவில் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். தொடர்ந்து நானும், எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமியும் இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவோம்'' என்று தெரிவித்தார்.
முன்னாள் ஊராட்சித் தலைவர் மாங்குடி, நகரத் தலைவர் பாண்டி மெய்யப்பன், இந்திய கம்யூனிஸ்ட் ராமச்சந்திரன், மதிமுக மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.