

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதனூர் அணையில் இருந்து அனுமதியின்றித் தண்ணீர் திறக்கப்பட்டதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர், சிவகங்கை மாவட்டம் வன்னிகுடி கிராமக் கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுசெல்லும் வகையில் மானாமதுரை அருகே பனிக்கனேந்தல், ஆதனூர் இடையே ஆதனூர் படுகை அணை அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காக அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரைப் பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறாமலேயே சிலர் மீன் பிடிப்பதற்காகத் திறந்து விட்டனர். இதனால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் சுரேஷ் கூறுகையில், ''அனுமதியின்றி சிலர் ஷட்டரைத் திறந்துவிட்டனர். அதை அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.