

நீலகிரி மலை ரயிலை சாதாரண கட்டணத்தில் இயக்க, ரயில்வே அமைச்சரைச் சந்தித்து முறையிடுவேன் என, நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார்.
நீலகிரி எம்.பி. ஆ.ராசா நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் கடந்த மாதம் யானை தாக்கி உயிரிழந்த மூன்று பேர் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியை நேற்று வழங்கினார்.
இந்நிலையில், அவர் இன்று (ஜன.08) உதகையிலிருந்து குன்னூருக்கு மலை ரயிலில் பயணித்தார்.
அப்போது அவர் கூறும் போது, "பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலை கரோனா காலத்தில் தனியாருக்குக் குத்தகைக்கு விட முயன்றதை நிறுத்தியும், கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ரயிலை இயக்கவும் நான் முயன்றேன். ரயில்வே அதிகாரிகளையும், மத்திய ரயில்வே அமைச்சரையும் சந்தித்து ரயிலை இயக்க வலியுறுத்தினேன். அதனடிப்படையில் மத்திய ரயில்வே அமைச்சர் ரயிலை இயக்க அனுமதித்துள்ளார். நீலகிரி எம்.பி. என்ற முறையில் ரயில்வே நிர்வாகத்துக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, 1974-ல் மலை ரயில் சேவையை நிறுத்த முயன்றபோது, அப்போதைய முதல்வர் கருணாநிதி அதைக் கடுமையாக எதிர்த்தார். மேலும், சுற்றுலாவை மேம்படுத்த மலை ரயில் சேவை தொடர வேண்டும் என வலியுறுத்தினார். ரயிலை இயக்குவதில் இழப்பு ஏற்பட்டால் தமிழக அரசு அதை ஈடு செய்யும் என்றார். அதன் பின்னர் மலை ரயில் சேவை தொடர்ந்தது. இந்த ரயிலை இயக்க முயற்சியில் வெற்றி கண்டுள்ளோம்.
கரோனா காலத்துக்குப் பின்னர் தற்போது இயக்கப்படும் மலை ரயில் முன்பதிவு கட்டணத்துடன் இயக்கப்படுகிறது.
உடனடியாகப் பயணக் கட்டணத்தைக் குறைக்கவும், ரயில் சாதாரண கட்டணத்தில் இயக்க மத்திய அமைச்சரைச் சந்தித்து தீர்வு ஏற்படுத்துவேன்" என்றார்.
ஆ.ராசாவுடன் திமுக மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக், முன்னாள் அமைச்சர் க.ராமசந்திரன் உட்பட நிர்வாகிகள் ரயிலில் பயணித்தனர்.