Last Updated : 08 Jan, 2021 07:46 PM

 

Published : 08 Jan 2021 07:46 PM
Last Updated : 08 Jan 2021 07:46 PM

நிதி நெருக்கடியில் பல கோடி ரூபாய் செலவு; துணை ராணுவப் படையைத் திரும்பப் பெறுக: காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் கடிதம்

காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, அதைத் தடுத்த போலீஸார் | படம் எம். சாம்ராஜ்.    

புதுச்சேரி

நிதி நெருக்கடியில் பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்பதால் துணை ராணுவப் படையைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்குக் காங்கிரஸ் தலைமையிலான மதச் சார்பற்ற கட்சிகள் வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

புதுச்சேரியில் பல பகுதிகளில் ஆயுதங்களுடன் துணை ராணுவப் படையினர் அணிவகுத்து நிற்பதால் மக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். நகரப் பகுதிக்குள் பல இடங்களுக்கு மக்கள் நடமாடவே முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் கிரண்பேடியைத் திரும்பப் பெற வலியுறுத்தி அண்ணாசிலை பகுதியில் போராட்டம் காலையில் தொடங்கியது. துணை ராணுவப் படையினர் அப்பகுதியிலும் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் தொடர்பாகத் துணை ராணுவப் படையினர் புகைப்படங்கள் எடுத்ததை அங்கிருந்தோர் கேள்வி எழுப்பினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட மதச்சார்பற்ற கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.

அதன் விவரம்:

''போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாகத் தீர்ப்பளித்தது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தோம். ஆனால், கிரண்பேடி உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் அபூர்வா கார்க், 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

அதைத் தொடர்ந்து ஆட்சியர் அளித்த அனுமதிப்படி அண்ணாசிலை பகுதியில் ஜனநாயக வழியில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இதற்கு முன்பாகவே, ஆளுநர் அலுவலகத்தைச் சுற்றித் தற்காலிகத் தடுப்புகள் அமைத்து மூன்று அடுக்குப் பாதுகாப்பைப் புதுச்சேரி காவல்துறை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் பதற்றச் சூழல் நிலவுவதாக மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பி, தனது செல்வாக்கின் மூலம் மத்திய துணை ராணுவப் படையினரைப் புதுச்சேரிக்கு கிரண்பேடி வரவழைத்துள்ளார். புதுச்சேரியில் நூற்றுக்கணக்கான மத்திய துணை ராணுவப் படையினரை துப்பாக்கி, ஆயுதங்களை ஏந்தி நிற்க வைத்து மக்களைக் கிரண்பேடி அச்சுறுத்துகிறார்.

புதுச்சேரி காவல்துறையின் திறமையைச் சிறுமைப்படுத்தும் விதத்தில் மத்தியப் படையை அழைத்துள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய துணை ராணுவப் படையினர் பத்து நாட்கள் புதுச்சேரியில் தங்கி இருக்க ஊதியம், உணவு மற்றும் இதர செலவுகளுக்குப் புதுச்சேரி அரசு பல கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.

ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருக்கும் புதுச்சேரி அரசு, தனி ஒருவரின் பாதுகாப்பு எனக் கூறி பல கோடி ரூபாய் அரசு நிதியை விரயம் செய்வது தேவையற்றது. மத்திய அரசு உடனடியாகப் புதுச்சேரிக்கு அனுப்பிய மத்திய துணை ராணுவப் படையைத் திரும்பப் பெற வேண்டும்''.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x